திருவனந்தபுரம்: திருச்சூர் மாவட்டம், கொடுங்கல்லூரை சேர்ந்த அப்துல் காதர் மகன் ரிபின் காதர் (28). இவர் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பேஸ்புக் சாட்டிங் மூலம் இவருக்கு கொச்சியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. ரிபினுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால், இதை அவர் மாணவியிடம் தெரிவிக்கவில்லை.நாளடைவில் இவர்களுக்கு இடையே நெருக்கம் மிக அதிகமானது. இந்நிலையில், மாணவியிடம் அவரது போட்டோவை அனுப்புமாறு ரிபின் கேட்டுள்ளார். அந்த மாணவியும் தனது போட்டோவை அனுப்பி வைத்துள்ளார். கடந்த மாதம் ரிபின் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால், அதற்குள் ரிபினுக்கு திருமணமான விபரம் மாணவிக்கும், அவரது வீட்டுக்கும் தெரிந்து விட்டது. ரிபினை திருமணம் செய்ய அந்த மாணவி மறுத்தார். இதனால், ஆத்திரமடைந்த ரிபின் மாணவியை பழிவாங்க திட்டமிட்டார்.
ஏற்கனவே, தன்னிடமிருந்த மாணவியின் புகைப்படத்தை ‘மார்பிங்‘ மூலம் நிர்வாண புகைப்படமாக மாற்றிய அவர், அதை இன்டர்நெட்டில் வெளியிட்டார். இதைப் பார்த்து மாணவி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, பெற்றோரிடம் கூறினார். ரிபினை தொடர்பு கொண்டு புகைப்படத்தை நீக்குமாறு கூறியுள்ளனர். அவர் அதை ஏற்கவில்லை. இதையடுத்து, மாணவியின் பெற்றோர் களமசேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ரிபின் தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, கொடுங்கல்லூருக்கு வந்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜினதேவன் தலைமையிலான போலீசார் கொடுங்கல்லூருக்கு விரைந்து சென்று ரிபினை கைது செய்தனர். அவரது லேப்டாப்பையும் கைப்பற்றினர். விசாரணைக்கு பிறகு போலீசார், ரிபினை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment