Tuesday, 17 September 2013

அப்பாவிகள் என்று விடுவிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு செல்லாது: ஆந்திர ஐகோர்ட் உத்தரவு



ஐதராபாத்: "குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பின், நிரபாரதி என விடுவிக்கப்பட்ட, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு, ஆந்திர மாநில அரசு இழப்பீடு வழங்கியது செல்லாது' என, ஆந்திர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2007ல், ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. இதில், ஒன்பது பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பாக, ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சி.பி.ஐ., விசாரணையில், "கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களில், 70 பேருக்கு, இந்த கலவரத்தில் தொடர்பில்லை. அவர்கள் அப்பாவிகள்' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட இளைஞர்களில், 20 பேருக்கு, தலா, மூன்று லட்சம் ரூபாயும், 50 பேருக்கு, தலா, 20 ஆயிரம் ரூபாயும், இழப்பீடாக அளித்து, ஆந்திர மாநில காங்., அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஐதராபாத்தை சேர்ந்த, வெங்கடேஷ் கவுட் என்ற வழக்கறிஞர், ஆந்திரா ஐகோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி, கல்யாண் ஜோதி சென்குப்தா தலைமையிலான,"பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இதுபோன்ற இழப்பீடுகளை வழங்குவதற்கு, மாநில அரசுக்கு, எந்தவிதமான அதிகாரமும் இல்லை. ஒருவர், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பதற்காக, அவருக்கு, அரசு சார்பில் இழப்பீடு வழங்குவது, தவறான நடவடிக்கை.
ஏற்கனவே, இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால், சம்பந்தபட்டோரிடமிருந்து, அந்த இழப்பீடு தொகையை திரும்ப பெற வேண்டும். இனிமேல், இதுபோன்ற இழப்பீடுகளை வழங்க கூடாது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து, காங்., ஆண்டு வரும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, முகமது அலி சபீர் கூறுகையில்,""தேவைப்பட்டால், ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மேல் முறையீடு செய்யப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment