Sunday, 1 September 2013

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் முதல் தீர்ப்பு: குற்றம் சாட்டப்பட்டவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக அடித்து கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் ராம்சிங் என்ற குற்றவாளி திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். இவர்களில் ஒரு குற்றவாளிக்கு 17 வயதே ஆவதால் அவன் மீதான வழக்கு மட்டும் டெல்லியில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வாத-பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். நாட்டையே உலுக்கிய இந்த பாலியல் வழக்கில் வழங்கப்பட உள்ள முதல் தீர்ப்பு இதுவாகும்.

இது சிறுவனுக்கு எதிரான குற்றச்சாட்டு என்பதால், அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை மட்டுமே தண்டனை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 4 பேர் மீதான வழக்குகள் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜூலை 11-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால் தீர்ப்பு தேதி தள்ளிக்கொண்டே போனது.

இரண்டாவது முறையாக சிறுவன் மீதான வழக்கின் தீர்ப்பை ஆகஸ்டு 5–ந் தேதிக்கு நீதிபதி கீதாஞ்சலி கோயல் தள்ளி வைத்தார்.

ஆகஸ்டு 5–ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பினை மீண்டும் ஆகஸ்டு 19-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பினை வரும் 31-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி மீண்டும் அறிவித்தார். தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் கோர்ட் வாசலில் ஏராளமான ஊடக நிருபர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

பிற்பகல் 3 மணி அளவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

போலீசார் தாக்கல் செய்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிக்கு 3 ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன் என்று கூறிய நீதிபதி தண்டனையை சிறப்பு காப்பகத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment