காதல் மனைவியை கொன்றுவிட்டு போலீஸ்காரர் தற்கொலை
திருவண்ணாமலையில் காதல் திருமணம் செய்த மனைவியை கொன்றுவிட்டு போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காதல் திருமணம்
திருவண்ணாமலையை அடுத்த கழிக்குளம் கிராமத்தை சேர்ந்த வெள்ளிக்கண்ணு மகன் குமார் (வயது32). இவர் கடந்த 2003-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார். தற்போது கீழ்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் குயிலம் கிராமத்தை சேர்ந்த கலையரசிக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இருவரும் காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1½ வயதில் முகேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.
வீட்டுக்குள் பிணங்கள்
நேற்று முன்தினம் காலை ஊருக்கு வருவதாக கூறிய போலீஸ்காரர் குமாருக்கு அவரது தம்பி தங்கராஜ், போன் செய்தார். அப்போது குமார் போனை எடுக்கவில்லை.
சந்தேகம் அடைந்த தங்கராஜ், நேற்று பகல் திருவண்ணாமலைக்கு வந்து பார்த்தபோது, குமார் வீடு பூட்டி கிடந்தது. ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, கலையரசி தரையில் இறந்து கிடந்தார். குமாரின் பிணம் தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தை முகேஷ், தாய் கலையரசியின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தான்.
விசாரணை
தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். குமாரின் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில், அவருடைய கால்களுக்கு நடுவில் கழுத்தில் காயத்துடன் கலையரசி பிணம் கிடந்தது.
நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஆத்திரம் அடைந்த குமார், மனைவியை வயரால் கழுத்தை இறுக்கி கொலைசெய்து விட்டு, தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கலாம் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசாரும் உதவி கலெக்டர் காசியும் விசாரணை நடத்துகின்றனர்.
No comments:
Post a Comment