ஓரினச் சேர்க்கை, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது உள்பட மக்களின் நவீன வாழ்க்கை முறை குறித்து விவாதிக்க போப் பாண்டவர் பிரான்சிஸ் முடிவு செய்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிஷப்களின் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளது.
உலகெங்கும் உள்ள பிஷப்கள் இது தொடர்பான தங்களின் கருத்துகளைத் தெரிவிப்பதற்காக அவர்களுக்கு இதுசார்ந்த கேள்விகள் அடங்கிய பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.
பல புதிய சூழ்நிலைகள் உருவாகி, தேவாலயத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாம் கேள்விப்பட்டிராத விஷயங்கள் புதிதாக எழுந்துள்ளன. அவற்றின் விளைவாக ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து வாழ்வது போன்ற வித்தியாசமான சூழல்கள் உருவாகியுள்ளன.
ஆகவே, இது தொடர்பான கத்தோலிக்க கிறிஸ்தவ வாழ்க்கை முறைகள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2014- 15 ஆம் ஆண்டுகளில் பிஷப்கள் பங்கேற்கும் உயர்நிலை திருச்சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாதவர்களின் குழந்தைகளுக்கும் ஞானஸ்நானம் செய்விக்கலாம் என போப் பிரான்ஸிஸ் ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளார்.
ஓரினச் சேர்க்கையாளர் குறித்த கேள்வியொன்றுக்கு, ஒருவர் ஓரினச் சேர்க்கையாளராக இருந்து, அவர் கடவுள் மீது பற்றுமிக்கவராக இருந்தால், அவர் குறித்து தீர்மானிக்க நான் யார் எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
போப்பாக பிரான்ஸிஸ் தேர்வு செய்யப்பட்ட பின்னர், தேவாலயங்கள் சாமான்ய மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் அவர் புனரமைப்புகளை மேற்கொள்ள விரும்புவது அவரின் நடவடிக்கைகளில் இருந்து தெரிகிறது.
No comments:
Post a Comment