Tuesday, 23 April 2013

குன்னூரில் 2 பிரிவினருக்கிடையே நடந்த மோதல்:

குன்னூரில் 2 பிரிவினருக்கிடையே நடந்த மோதல்: மேலும் 5 பேர் கைது
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மஞ்சுநாத் என்பவர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டார். இதை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக இந்து முன்னணியினர் நீலகிரி மாவட்டம் முழுவதும் நோட்டீசு ஒட்டினர். குன்னூர் பகுதியில் நோட்டீசு ஒட்டியபோது ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நீலகிரி மாவட்ட இந்து முன்னணி செயலாளர் அரிகரன் மற்றும் பொறுப்பாளர்கள் வெங்கட்ராஜ், ஜெய்க்குமார் ஆகியோர் தாக்கப்பட்டனர்.

அரிவாள் வெட்டும் விழுந்தது. இதில் காயமடைந்த அரிகரன் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குன்னூரில் நடந்த இந்த மோதல் தொடர்பாக ஒரு பிரிவினரை சேர்ந்த 12 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நோட்டீசு ஒட்டி தகராறில் ஈடுபட்டதாக குன்னூரை சேர்ந்த சீனிவாசன் (வயது32), சரவணக் குமார் (35), நாகராஜ் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்த அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குன்னூர் கன்னிமார் கோவிலில் நடந்த பிரச்சினையில் ஜஹாங்கீர் என்பவர் தாக்கப்பட்டது சம்பந்தமாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சீனிவாசன் மற்றும் வீரகன் (23), ராஜா (31) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களும் 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டனர். குன்னூரில் நடந்த மோதல் தொடர்பாக இது வரை இருபிரிவினரை சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இன்னும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment