Sunday, 28 April 2013

ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த சிறுமி பலி













கரூர் அருகே, 700 அடி ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த சிறுமி 15 மணி நேரம் போராடி மீட்கப்பட்டவள் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தாள்.
7 வயது முத்துலட்சுமி
திண்டுக்கல் மாவட்டம், புத்தூர் வடமதுரையை சேர்ந்தவர் பாண்டி என்கிற சின்ன பூசாரி (வயது 33). இவருடைய மனைவி பெருமாயி (28). இவர்களுக்கு முத்துலட்சுமி (7), விஜிலட்சுமி (3), தனலட்சுமி (1) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.கணவன்–மனைவி இருவரும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சூரிபாளி கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்து அங்குள்ள சக்திவேல் என்பவரின் தோட்டத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக தங்கி கூலி வேலை செய்து வருகிறார்கள்.
700 அடி ஆழ்குழாய் கிணறு
சக்திவேல் தோட்டத்தில் சுமார் 700 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டும் பணி நடந்தது. நேற்று முன்தினம் கிணறு தோண்டும் பணி முடிவடைந்ததும் அந்த ஆழ்துளை குழாயின் மேல் பகுதியில் சாக்கு போட்டு மூடி வைத்து இருந்தனர்.இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் சின்ன பூசாரியின் குழந்தைகள் முத்துலட்சுமியும், விஜிலட்சுமியும் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது முத்துலட்சுமி ஆழ்குழாய் கிணறு மீது மூடப்பட்டு இருந்த சாக்கின் மேல் காலை வைத்து இருக்கிறாள்.
தவறி விழுந்தாள்
குழந்தையின் எடையை தாங்க முடியாததால் குழாயின் மேலே போடப்பட்டு இருந்த சாக்கு கிழிந்து விட்டது. இதனால் எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் முத்துலட்சுமி தவறி விழுந்தாள். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி முத்துலட்சுமி கதறி அழுதாள்.இதைக் கண்ட விஜிலட்சுமி வீட்டிற்கு ஓடிச்சென்று நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். உடனே கணவன்–மனைவி இருவரும் பதறி அடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்து பார்த்தனர்.
பதறிய பெற்றோர்
அப்போது ஆழ்குழாய் கிணற்றுக்குள் முத்துலட்சுமி உயிருக்கு போராடி கொண்டு இருந்தாள். அவளை பார்க்க முடியவில்லை. ஆனால், பீதியுடன் முத்துலட்சுமி எழுப்பிய அலறல் சத்தம் மட்டும் கேட்டது. இதனால் பதறித்துடித்த பெற்றோர், வாயிலும், வயிற்றிலும் அடித்தபடி கதறி அழுதனர்.அவர்களுடைய அலறலை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் உதவியுடன் குழந்தையை மீட்கும் முயற்சியில் முத்துலட்சுமியின் பெற்றோர் ஈடுபட்டனர். அந்த கிணறு 12 அடி வரையில் அகலமாகவும், அதன் கீழ் பகுதி குறுகலாகவும் இருந்தது.
12 அடி ஆழத்தில் சிக்கிய சிறுமி
இதனால், கிணற்றுக்குள் விழுந்த சிறுமி முத்துலட்சுமி 12 அடி ஆழத்தில் சிக்கியபடி, அங்கிருந்து கதறி அழுதபடி இருந்தாள். சிறுமியின் பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் சிறுமிக்கு தைரியம் சொல்லியவாறு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.சிறுமியின் குரல் கேட்ட திசையை நோக்கி ஒரு சேலையை எடுத்து ஆழ்குழாய் கிணற்றில் போட்டனர். அதை சிறுமி பிடித்துக்கொண்டாள். அந்த சேலையை பிடித்து மெதுவாக குழந்தையை மேலே தூக்கினார்கள்.
தீயணைப்பு படையினர்
ஆனால் ஆழ்குழாய் கிணற்றில் மேலே வரும் வழியில் பாறைகள் இருந்ததால் சிறுமியால் மேலே வர முடியவில்லை. ஒரு கட்டத்தில் குழந்தையின் அழுகை அதிகமாகவே சேலையின் மூலம் குழந்தையை மேலே மீட்கும் முயற்சியை கைவிட்டனர்.இதற்கிடையில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுமி தவறி விழுந்த செய்தி அந்த கிராமத்திற்குள் காட்டுத்தீ போல் பரவியது. தகவல் அறிந்து ஊர் மக்கள் அனைவரும் அங்கு ஓடி வந்து பார்த்தனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
குழி தோண்டினார்கள்
தகவல் அறிந்ததும் கோட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியநாராயணன் தலைமையில் அரவக்குறிச்சி நிலையத்தை சேர்ந்த 20–க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு மீட்பு பணிகள் தொடங்கியது.சம்பவ இடத்திற்கு 5 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. அந்த பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆழ்குழாய் கிணற்றின் அருகே மற்றொரு குழி தோண்டும் பணி தொடங்கியது. சிறுமி சிக்கி இருக்கும் இடம் வரை குழி தோண்டி அதன் வழியாக பாதை அமைத்து சிறுமியை மீட்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.
பாறைகளால் சிக்கல்
அந்த ஆழ்குழாய் கிணற்றை சுற்றிலும் கடினமான பாறைகள் இருந்ததால் பொக்லைன் எந்திரங்கள் மூலம் குழி தோண்டும் பணியில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 2 அடி ஆழத்தில் தோண்டுவதற்கே ஒரு மணி நேரத்திற்கும் மேலானது.இதனால் பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் ஐந்து பவர் டிரில்லர்கள் அங்கு உடனடியாக வரவழைக்கப்பட்டன. அவைகள் மூலம் பாறைகளைச் சுற்றிலும் ஓட்டை போடப்பட்டு பாறைகளை உடைத்தெடுத்து குழி தோண்டும் பணி தொடர்ந்து நடந்தது. சிறுமி மயங்கிவிடாமல் இருப்பதற்காக, குழிக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.காலை 7.30 மணி அளவில் கிணற்றுக்குள் விழுந்த சிறுமி, அச்சத்தில் அழுது கொண்டு இருந்தாலும், பகல் 1 மணி வரை அவளுடைய தாயார் மற்றும் தாத்தாவுடன் பேசிக்கொண்டு இருந்தாள். அதன்பின் உடல் நிலை சோர்வடைந்ததால் அவள் எழுப்பிய குரல் சரிவர மேலே கேட்கவில்லை.என்றாலும் மீட்பு பணி சளைக்காமல் தொடர்ந்து நடந்து வந்தது. இதற்கிடையில், தகவல் அறிந்த சுற்றுப்புற கிராம மக்களும் சாரை சாரையாக வந்து அங்கு கூட தொடங்கினார்கள். பதைபதைப்புடன் வந்த அவர்களை கட்டுப்படுத்திய போலீசார் சற்று தூரம் தள்ளி நிற்க வைத்தனர்.
நவீன கருவி மூலம்....
ஆழ்குழாய் கிணறுகளில் தவறி விழுந்து சிக்கிய குழந்தைகளை மீட்பதற்காக, மதுரை மீனாட்சி மிஷன் ஆராய்ச்சி மையம் சார்பில் நவீன கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மாலை 5 மணி அளவில், இந்த நவீன கருவி வரவழைக்கப்பட்டு சிறுமியை வெளியே தூக்கும் முயற்சி நடைபெற்றது.ஆனால், மண் சரிந்து விழுந்து சிறுமியின் கை மட்டுமே மேலே தெரிந்ததாலும், அவள் மிகவும் சோர்வுற்ற நிலையில் இருந்ததாலும், சிறிது தூரம் மட்டுமே அவளை மேலே தூக்க முடிந்தது. இதனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.
மயங்கிய நிலையில் மீட்பு
அதற்குள் இரவு நெருங்கியதால், ஜெனரேட்டர் உதவியுடன் ஒரு வாகனத்தில் இரு சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்டு பள்ளம் தோண்டும் பணி தொடர்ந்து நடந்தது. இரவு 10 மணி அளவில், 12 அடி ஆழத்துக்கு குழி தோண்டும் பணி முடிவடைந்தது. அதன்பின் சிறுமி விழுந்து கிடந்த இடத்தை அடைய குறுக்காக 5 அடி தூர குகை அமைக்கும் பணி நடந்தது.அப்போது மண் சரிந்து விழுந்ததால், இந்த பணியிலும் சிக்கல் ஏற்பட்டது. என்றாலும் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்பட்ட மீட்பு குழுவினர் இரவு 10.45 மணி அளவில், சிறுமி முத்துலட்சுமியை குழியில் இருந்து வெளியே எடுத்தனர். ஏறத்தாழ 15 மணி நேர போராட்டத்துக்குப்பின் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட முத்துலட்சுமியை, உடனடியாக ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பரிதாப சாவு
அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் இரவு 11.40 மணி அளவில் அவள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.இந்த தகவல் அறிந்ததும், சிறுமியின் பெற்றோர் உள்பட கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

No comments:

Post a Comment