Monday, 22 July 2013

மூன்றாண்டில் நான்கு லட்சம் தற்கொலைகள் !

ஈரோடு: இந்தியாவில் கடந்த, மூன்று ஆண்டுகளில், தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. "வாழத்தெரியாத கோழைகள் எடுக்கும் தைரியமான முடிவு தற்கொலை' என்பர். காதல், தேர்வில் தோல்வி, கள்ளக்காதல், போதைக்கு அடிமை, மனைவி, கணவன் பிரிதல், வரதட்சணை கொடுமை, மன அழுத்தம், கற்பழிப்பு, வறுமை, வேலையின்மை போன்ற பல காரணங்களால் தற்கொலைகள் அதிகரிக்கிறது.
இந்தியாவில், நான்கு நிமிடத்துக்கு, ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கிறது. 2010ம் ஆண்டில், இந்தியாவில், ஒரு லட்சத்து, 34,599 பேரும், 2011ல், ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 585 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

கடந்த, 2012ல், ஒரு லட்சத்து, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டில் மட்டும், இந்தியாவில், நான்கு லட்சத்து, 10,184 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து பசுமை உலகம் மணமோகன் கூறியதாவது: உலக அளவில், தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில், இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்திய அளவில், மேற்கு வங்காளம் முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. 2010ம் ஆண்டில், 15,947 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில், சென்னையில் மட்டும், 2,438 பேர் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்தோர் பெரும்பாலும், 35 வயதுக்கு உட்பட்டவர்களே.


"மன'பாடத்தை போதிக்க :

கடந்த, 2011, 2012ம் ஆண்டில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாக, கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இன்றைய சூழலில் கல்வி கூட, மாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளதால், பல மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இன்றைய இளம் சமூகத்தில், காதல் தோல்வியால், தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எந்த பிரச்னைக்கும் மரணம் தீர்வாகாது. பிரச்னையை சமாளிக்கும் திடமான மனம், நம் அனைவருக்கும் தேவையானது. பள்ளி பருவத்திலேயே, மனப்பக்குவத்தையும், மனவலிமையையும் ஏற்படுத்தும் விதமாக, பள்ளிகளில், மனப்பாடத்தை மட்டும் ஆசிரியர்கள் போதிக்காமல், "மன'பாடத்தை போதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு, மன தைரியத்தை வளர்க்கவும், தோல்வியில் துவண்டு விடாமல், போராடும் வகையில் தயார்படுத்தவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்

No comments:

Post a Comment