மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில், பிறந்த ஆண் குழந்தையை விற்க மறுத்ததால்,
கடத்தியதாக, பெண் புரோக்கர்கள் மூவரை போலீசார் கைது செய்து, குழந்தையை
மீட்டனர்.
மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி.
இவரது மனைவி காளீஸ்வரி,27. மகன், மகள் உள்ள நிலையில், மூன்றாவது முறையாக
காளீஸ்வரி கர்ப்பமானார். அரசு மருத்துவமனையில், மார்ச் 25ல்
அனுமதிக்கப்பட்டு, ஏப்.,2ல் ஆண் குழந்தையை பெற்றார். பின், ஏப்.,13ல்
வீட்டிற்கு திரும்பிய நிலையில், "எனது குழந்தையை, விற்க மறுத்ததால்,
மருத்துவமனை புரோக்கர்கள் செல்லூர் முருகன் மனைவி சாரதா, 65, கணேசன் மனைவி
ஆறுமுகம்,55, ஒபுளாபடித்துறை நாகராஜன் மனைவி பாண்டியம்மாள்,43, ஆகியோர்,
கடத்திச் சென்றதாக' போலீசில் காளீஸ்வரி புகார் செய்தார்.
விசாரணையில்,
குழந்தையை ரூ.2.50 லட்சத்திற்கு மதுரை காமராஜர் ரோட்டில் வசிக்கும்
தம்பதிக்கு விற்றது தெரிந்தது. புரோக்கர்களை கைது செய்து, குழந்தையை
போலீசார் மீட்டனர்.
தாய் மீது சந்தேகம்:
போலீசார் கூறியதாவது:
புரோக்கர்கள் கூறிய தகவல்படி, வறுமை காரணமாக குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு
காளீஸ்வரி விற்றது தெரியவந்தது. பின், மனம் மாற்றம் அடைந்த அவர்,
குழந்தையை தருமாறு கேட்டபோது, தரமறுத்தனர். ஆத்திரமடைந்த காளீஸ்வரி, மேலும்
ஒரு குழந்தையை விற்க தயாராக இருப்பதாக கூறி, புரோக்கர்களை வரவழைத்து,
எங்களிடம் பிடித்துக் கொடுத்தார். காளீஸ்வரி உண்மையிலேயே விற்றாரா என்பது
குறித்து விசாரணை நடத்துகிறோம். கைதான மூவருக்கும், கடந்தாண்டு
மருத்துவமனையில் நடந்த குழந்தை திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதுகுறித்தும் விசாரிக்கிறோம், என்றனர்.
அதிகரிக்கும் புரோக்கர்கள்
மதுரை
அரசு மருத்துவமனையில், நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு "கடத்தவும்',
பிறக்கும் குழந்தையை திருடியோ அல்லது குறைந்த விலைக்கு பேசியோ வாங்கி,
விற்கவும் ஆண், பெண் புரோக்கர்கள் உள்ளனர். போலீசார் அவ்வப்போது "ரெய்டு'
செய்து, நோயாளிகளை "கடத்தும்' ஆண் புரோக்கர்களை மட்டும் கைது செய்கின்றனர்.
மகப்பேறு பிரிவில் உலா வரும் பெண் புரோக்கர்களை கண்டுகொள்வதில்லை;
மருத்துவமனை நிர்வாகமும் கவலைப்படுவதில்லை. இதனால்தான், குழந்தை திருட்டு
அதிகரிக்கிறது. அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கிடைக்கும் என்பதால், பெண்
புரோக்கர்களின் எண்ணிக்கையும் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை
ஊழியர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment