
கூடலூர் அருகே காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் பாட்டியை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் வேலை நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதிநகரை சேர்ந்தவர் ஜோயி (வயது 50). இவருடைய மனைவி கிரிஜா (45). இவர்களுக்கு ஜோஸ்ல்னா (22) என்ற மகளும், ஜோஜோ (21) என்ற மகனும் உள்ளனர். ஜோயின் தாய் சின்னம்மா என்ற அம்னி (வது 65). இவர்களில் ஜோஜோ கேரள மாநிலம் சுல்தான்பத்தேரியில் ஒரு வணிக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
ஜோஸ்ல்னா, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலத்தில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க சென்றார். பின்னர் கோழிக்கோடு பகுதியில் ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார்.
காதல் மலர்ந்தது.
அப்போது கேரள மாநிலம் மீனங்காடி பகுதியை சேர்ந்த ஜோஸ் என்பவரின் மகன் லெனின் (27) என்பவருக்கும், ஜோஸ்ல்னாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. லெனின், ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து இருந்ததால், கோழிக்கோட்டில் உள்ள ஒரு உணவு விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் லெனினும், ஜோஸ்ல்னாவும் தீவிரமாக காதலித்தனர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜோஸ்ல்னா ஓவேலி பாரதிநகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் சவுதி அரேபியாவுக்கு ஓட்டல் வேலைக்கு சென்றார்.
அதன்பிறகு ஜோஸ்ல்னா, லெனினிடம் சரிவர பேசுவது இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜோஸ்ல்னா தனது பெற்றோர் மற்றும் பாட்டியை பார்க்க ஓவேலி பாரதிநகருக்கு வந்தார்.
திருமணம் செய்ய வற்புறுத்தல்
நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ஜோஸ்ல்னா, அவரது தாய் கிரிஜா, பாட்டி அம்னி ஆகியோர் வீட்டில் அமர்ந்து இருந்தனர். அப்போது ஜோஸ்ல்னாவை தேடி கேரள மாநிலத்தில் இருந்து லெனின் ஓவேலி வந்தார். அப்போது அவர், தன்னிடம் சரிவர பேசாமல் உள்ளது குறித்து ஜோஸ்ல்னாவிடம் கேட்டதாகவும், அதற்கு ஜோஸ்ல்னா சரியான பதில் கூறவில்லை என்றும் தெரிகிறது. ஆனாலும் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி லெனின் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது ஜோஸ்ல்னாவின் பாட்டி அம்னி, வாலிபர் லெனினை திட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லெனின் வீட்டின் அருகே கிடந்த இரும்புகம்பியை எடுத்து அம்னியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். தனது கண் எதிரே பாட்டியை அடித்து கொன்றதை கண்ட ஜோஸ்ல்னா பயத்தில் அலறினார். சத்தம் கேட்டு அவருடைய தாய் கிரிஜா வெளியே ஓடி வந்தார். ஆத்திரம் அடங்காத லெனின் கிரிஜாவின் தலையிலும் இரும்பு கம்பியால் தாக்கினார்.
தாய்-பாட்டி கொலைஇதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கிரிஜா பரிதாபமாக இறந்தார். கண் இமைக்கும் நேரத்தில் தனது தாய், பாட்டியை ஆகியோரை அடித்து கொன்றதால் ஆத்திரம் அடைந்த ஜோஸ்ல்னா சத்தம் போட்டு அலறியவாறு லெனினை தடுக்க முயன்றார். அப்போது இரும்பு கம்பியால் ஜோஸ்ல்னாவையும் லெனின் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ஜோஸ்ல்னா மயங்கி விழுந்தார்.
இந்த நேரத்தில் ஜோஸ்ல்னாவின் தந்தை ஜோயி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இதை அறிந்த லெனின் வீட்டின் முன்பக்க கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு பின்பக்கமாக வெளியேறி தேயிலை தோட்டங்களுக்கு நடுவில் இருளில் மறைந்திருந்தார்.தப்பி ஓட்டம்பின்னர் ஜோஸ்ல்னாவின் தந்தை ஜோயி வீட்டுக்குள் செல்வதற்காக கதவை தட்டி கொண்டே இருந்தார்.
அப்போது அங்கு பாய்ந்து வந்த லெனின், ஜோயியின் தலையில் பலமாக தாக்கினார். இதில் ஜோயி நிலைகுலைந்து அலறியபடி கீழே விழுந்தார். ஆனாலும் விடாமல் லெனின் தொடர்ந்து அவரின் தலையில் தாக்கினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் லெனின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நியூகோப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், ஆபத்தான நிலையில் இருந்த ஜோயி, ஜோஸ்ல்னாவை சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஜோயி பரிதாபமாக இறந்தார். ஜோஸ்ல்னா, மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.வாலிபர் கைதுஇந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி, இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், ஓம்பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, தேயிலை தோட்டத்தில் சந்தேகப்படும் படியாக நடந்து சென்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் 3 பேரை அடித்து கொன்ற லெனின் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து இரும்பு கம்பி மற்றும் சிறிய கத்தி, 2 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கலெக்டர் நேரில் ஆறுதல்ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் சங்கர், நீலகிரி எம்.பி. கோபாலகிருஷ்ணன், எம்.பி. கே.ஆர்.அர்ஜூனன், தாட்கோ தலைவர் கலைச்செல்வன், ஆவின் வாரிய இணைய தலைவர் அ.மில்லர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கூடலூர் ஆர்.டி.ஓ. ஜெகஜோதி ஆகியோர் பலியானவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
No comments:
Post a Comment