Monday, 22 April 2013

ரயில் மோதி பலியாகும் நபர் : மூன்று மாதங்களில் 28 பேர் பலி

கோவை : அதென்னவோ தெரியவில்லை.... ரயில்வே "ஒவர் பிரிட்ஜ்' இருந்தாலும் தண்டவாளத்தை தாண்டி செல்வதை, சிலர் போதையாகவே நினைக்கின்றனர். இந்த போதைதான், வாழ்வில் அவர்கள் இறுதியாக பயணம் செய்யும் பாதையாக மாறி விடுகிறது. போதுமான விழிப்புணர்வும் தடுப்பு நடவடிக்கைகளும் இல்லாததால், கோவை நகரில் ரயில் மோதி பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ரயில்வே பாதுகாப்பு விதி
முறைகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், ரயில்வே தண்டவாளங்களை கடக்கும் போது கவனக்குறைவுடன் செயல்படுவதால், விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் ரயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன. கேட் பூட்டப்பட்ட ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதை, பள்ளி மாணவர்கள் பலர் சாதனையாக கருதுகின்றனர்.
இது போன்ற அலட்சியப் போக்குதான் சமயத்தில் ஆபத்தாக முடிந்து விடுகிறது. கடந்த மூன்று மாதங்களில் ஆண்கள் 23 பேர், பெண்கள் 5 பேர் என, மொத்தம் 28 பேர், ரயில்களில் அடிபட்டு இறந்துள்ளனர். இதில் ஐந்து ஆண் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.
குற்ற வழக்குகள் அதிகரிப்பு
பயணிகளின் பாதுகாப்புக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடந்த ஜன., 1 முதல் மார்ச் 31 வரை, மொத்தம் 15 குற்றவழக்குகள் பதிவாகியுள்ளன; அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஐந்து லட்சத்து 27 ஆயிரத்து 200 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன் வளாகத்துக்குட்பட்ட பகுதிகளில், புகைபிடித்தல், மதுஅருந்துதல் உள்ளிட்ட 422 சிறிய அளவிலான குற்றங்கள் நடந்துள்ளன.
இதுதவிர, மோட்டார் வாகன சட்ட விதிமீறல்கள் தொடர்பாக 1,076 வழக்குகள் பதிவாகியுள்ளன; 71,950 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ரயில் பயணத்தின் போது, நள்ளிரவு 1.00 முதல் அதிகாலை 3.30 வரைதான் அதிகளவிலான குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து செல்வதை தவிர்த்தல், தங்களின் உடமைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துதல் உள்ளிட்டவற்றை கடைபிடிப்பதன் மூலம் மட்டுமே, ரயில்களில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும்.
கோவை ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் கூறியதாவது:
ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பதில் துவங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பாதுகாப்பான பயணத்துக்கு முதலில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை 99625 00500 என்ற மொபைல்போன் எண்ணிலும், அவசர உதவிக்கு 0422-230 0043 என்ற தொலைபேசி எண்ணிலும் பயணிகள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்றினால் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தலாம். குற்றச்சம்பவங்களை தடுப்பதில், போலீசாருக்கு பயணிகள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment