Monday, 22 April 2013

விவசாயி வீட்டில் ரூ.35 லட்சம் திருடிச் சென்று உல்லாசப் பயணம் சென்றவர் கைது

காவேரிபாக்கம் அருகே விவசாயி வீட்டில் ரூ.35 லட்சம் பணத்தைத் திருடிக்கொண்டு காரில் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் சென்றவரை சேத்துப்பட்டு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகா, ஓச்சேரியை அடுத்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (30), விவசாயி. இவருடைய நிலத்தை விற்பனை செய்து ரூ.35 லட்சம் பணத்தை வீட்டிலுள்ள பீரோவில் வைத்துவிட்டு அவர் வெளியூர் சென்றிருந்தாராம்.
 இதை அறிந்த எதிர் வீட்டிலுள்ள மொராஜிதேசாய் (35), கடந்த 15ஆம் தேதி செந்தில்குமாரின் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, வீட்டுக்குள் புகுந்து, ரூ.35 லட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.
 இப்பணத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் ஒரு காரை வாங்கிய அவர், காரில் அவரது மனைவி தீபா மற்றும் 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சுற்றி வந்துள்ளார். 16ஆம் தேதி இரவு திருவண்ணாமலையில் குடும்பத்துடன் காரிலேயே தங்கியுள்ளார்.
 இதுகுறித்து விவசாயி செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மொராஜிதேசாய் குறித்து விசாரித்து வந்தனர்.
 இந்நிலையில் அவரது மைத்துனர் பாலமுருகனிடம் விசாரணை செய்ததில், மொராஜிதேசாய் காரில் திருவண்ணாமலையிலிருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்துகொண்டிருக்கும் தகவல் கிடைத்துள்ளது.
 உடனே காவேரிப்பாக்கம் போலீஸார், சேத்துப்பட்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
 இதையடுத்து, சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் அருள்பிரசாத் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
 அப்போது சேத்துப்பட்டு-ஆரணி சாலையில் இந்திரவனம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டெதிரே நின்றிருந்த காரில் மொராஜிதேசாய், மனைவி தீபா மற்றும் குழந்தைகள் இருந்தது தெரியவந்தது. காரில் இருந்த பணத்தை கைப்பற்றிய போலீஸார், மொராஜிதேசாயை காவேரிப்பாக்கம் போலீஸில் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment