Tuesday, 28 May 2013

நீண்ட தூரப் பயணங்களில் விமானிகள் சிறிது நேரம் ஓய்வெடுக்க அனுமதி

நீண்ட தூரப் பயணங்களில் விமானிகள் சிறிது நேரம் ஓய்வெடுக்க விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி
நீண்ட தூர விமானப் பயணங்களில் பணியில் இருக்கும் விமானிகள், விமானம் பறந்துகொண்டிருக்கும் போது குறைந்தபட்ச நேரமாக 40 நிமிடங்கள் வரை ஓய்வெடுக்க, விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளது. பணியில் ஈடுபட்டிருக்கும் விமானிகளில், யாரேனும் ஒருவர் மட்டும், ஒரு சமயம் தூங்கலாம். அந்த நேரத்தில் மற்ற பணியாளர் குழுவினர், இன்னொரு விமானியை, பகல் நேரத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறையும், இரவு நேரங்களில் 20 நிமிடங்களுக்கு ஒரு முறையும் கவனித்தல் வேண்டும். விமானம் ஏறும்போதோ, இறங்கும்போதோ, அவசரக் காலங்களிலோ இதுபோன்று ஓய்வெடுத்தல் கூடாது. மேலும் குறைந்தது, மூன்று மணி நேரப் பிரயாணம் இருக்கும் விமானங்களில் மட்டுமே இதுபோல் செயல்படமுடியும் என்று விமானக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, இங்கிலாந்து, ஹாங்காங் போன்ற நாடுகளில் நீண்டதூர விமானப் பயணங்களில் இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன மேலும், 1992ஆம் ஆண்டின் நாசா ஆய்விலேயே அதிக நேரம் பணியில் ஈடுபடும் விமானிகளுக்கு, நடுவில் சிறிது நேரம் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டால், களைப்பினால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கலாம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளதால், அந்நாடுகள் இந்த நடைமுறையைப் பின்பற்றுகின்றன. 

விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் இந்த முடிவை, விமான ஓட்டிகள் வரவேற்றுள்ளனர். இது தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விஷயம் என்ற போதிலும், விமானிகள் நிம்மதியாக ஓய்வெடுப்பதில்லை. இந்த இடைவேளை, அவர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் என்று மூத்த விமானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment