
ஜாக்ரப் : மோப்ப சக்தி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நாய்தான். காவல் துறையிலும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர, கொலை வழக்கில் துப்பு துலக்கவும் மோப்ப நாய் உதவுகிறது. சில நாடுகளில் எலிகளை வைத்து கூட வெடிகுண்டு கண்டுபிடிக்கின்றனர். இதுபற்றி பல பகுதிகளில் ஆய்வுகளும் நடந்தன. இந்நிலையில், வெடிகுண்டுகளை தேனீக்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனோடு இணைந்த குரோடியா நாடு, அடர்ந்த பசுமை காடுகளும், பெரிய ஏரிகளும் உடையது. இயற்கை வளம் கொழிக்கும் இந்த நாட்டில், 1990ல் பால்கன் போரின்போது புதைத்து வைக்கப்பட்ட ஏராளமான கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. சுமார் 750 சதுர கி.மீ. பரப்பளவுக்கு கண்ணிவெடிகள் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மொத்தம் 90,000 வெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவற்றை அகற்ற பல்வேறு முயற்சிகள் நடந்தாலும், பலனளிக்கவில்லை. கண்ணிவெடியில் சிக்கி இதுவரை 2500 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்நாட்டில் உள்ள ஜாக்ரப் பல்கலைக்கழக வேளாண்மை துறை பேராசிரியர் நிகோலா கேசிக், தேனீக்களை பற்றி ஆய்வு செய்தார். அவற்றை தொடர்ந்து கண்காணித்ததில் அவை டிஎன்டி (டிரை நைட்ரோ டோலுவின்) என்ற வெடிபொருள் வாசனை மூலம் இரைதேடுவதை கண்டறிந்தார்.
வெடிகுண்டுகளின் அழிவு சக்தியை அளக்க ஒரு கிராம் டிஎன்டி அடிப்படை அலகாக குறிப்பிடப்படுகிறது. இத்தகைய டிஎன்டியை நுகரும் திறனுடைய தேனீக்களை, வெடிகுண்டு கண்டுபிடிக்க பயன்படுத்தலாம் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. உடனடியாக, தனது மாணவர்களுடன் இணைந்து தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். இந்த ஆராய்ச்சிக்கு இனிப்புடன் டிஎன்டியை கலந்து ஆங்காங்கு வைத்துவிட்டு, தேனீக்களின் நடவடிக்கையை உற்று கவனித்தனர். அப்போது, டிஎன்டி கலந்து வைத்த இனிப்பின் மையப்பகுதியை மட்டும் தேனீக்கள் மிகச்சரியாக நுகர்ந்தன.
இதுகுறித்து பேராசிரியர் நிகோலா கேசிக் கூறுகையில், ‘‘இந்த ஆராய்ச்சி, கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இது விஞ்ஞானபூர்வமாக வெற்றிபெற்றால், கண்ணிவெடி இருப்பதாக கருதப்படும் பகுதிகளில் தேனிக்களின் நடவடிக்கையை அகச்சிவப்பு கதிர்கள் மூலம் கண்காணித்து அகற்றி விடலாம். நாய், எலி மூலம் கண்ணிவெடியை கண்டுபிடிக்க முடியும் என்றாலும், அவற்றின் உடல் எடை காரணமாக வெடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தேனீக்களை பொறுத்தவரை அந்த பிரச்னையே இல்லை. தேனீக்கள் மூலம் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அமெரிக்காவில் நடந்துள்ளது’ என்றார்.
No comments:
Post a Comment