Friday, 24 May 2013

திருஷ்டி கழிக்க வந்த லாரி உயிரை பறித்தது


சித்தூர் : திருமண ஊர்வலத்தில் மணமகளின் தந்தை ஓட்டிய லாரி புகுந்து மணமகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரம் மண்டலம் சுண்ணப்புரால்லபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமா ராவ் (50), லாரி டிரைவர். இவரது மகள் லதா (20). இவருக்கும் பக்கத்து கிராமமான ராமண்ணகூடம் பகுதியை சேர்ந்த மங்கராஜு (24) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் காலை மணமகன் வீட்டில் நடைபெற இருந்தது.

இந்நிலையில், மணமகள் லதா, அவரது அக்கா குமாரி(30), இவரது மகன் சிவாஜி (4), ராமா ராவின் அண்ணி துர்கம்மாள் (45) உள்பட 50 பேர், லாரியில் மணமகனின் ஊருக்கு நேற்று முன்தினம் காலை வந்தனர். லாரியை ராமா ராவ் ஓட்டி வந்தார். இவர்களின் சம்பிரதாயப்படி, ஊர் எல்லையில் இருந்து மணமகளை, மணமகன் வீட்டார் திருஷ்டி கழித்து மணமேடைக்கு அழைத்து செல்வது வழக்கம். 

அதன்படி லாரியில் இருந்து இறங்கிய மணமகள் லதாவை, மணமகன் வீட்டார் மேளதாளங்களுடன் வரவேற்பு கொடுத்து மணமேடைக்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர். இவர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் சென்றனர். அப்போது ராமா ராவின் லாரி திடீரென பழுதானது. இதனால் ராமா ராவ் அங்கிருந்த சிலரை பின்னால் இருந்து லாரியை தள்ளிவிடும்படி கூறினார். அப்போது பலர் பின்புறம் சென்று லாரியை  தள்ளினர். ராமாராவ் லாரியை ஸ்டார்ட் செய் தார். அது ஸ்டார்ட் ஆனதும் ராம ராவின் கட்டுப்பாட்டை இழந்து திருமண ஊர்வலத்தில் புகுந்து தாறுமாறாக ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், மணமகள் லதா, குமாரி, சிவாஜி, துர்கம்மாள் ஆகியோர் அதே இடத்தில் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 

4 பேர் படுகாயம் அடைந்தனர். 5 நிமிடங்களில் மணமேடை ஏறவேண்டிய மகளும், மற்றொரு மகள், பேரன், அண்ணி என தன் குடும்பத்தினர் தனது கையாலேயே இறந்ததை கண்டு ராமா ராவ் அதிர்ச்சியில் கதறி அழுதார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment