கேன்ஸ்
‘கேன்ஸ்’ சினிமாப்பட விழாவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில் பங்கேற்ற பிரபல நடிகர்கள் ஓட்டம் பிடித்தனர்.
‘கேன்ஸ்’ சினிமாப்பட விழா
பிரான்சு நாட்டிலுள்ள கேன்ஸ் நகரில் உலக திரைப்பட விழாக்களில் ஒன்றான ‘கேன்ஸ்’ சினிமாப்பட விழா நடைபெற்று வருகிறது. மொத்தம் 12 நாட்கள் இவ்விழா கோலாகலமாக நடக்கிறது. இதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து பிரபல நடிகர்கள், நடிகைகள், டைரக்டர்கள், சினிமா கலைஞர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர். இந்நிலையில் அங்குள்ள ஓட்டலில் நடிகைகளின் ரூ.7 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு போனதாக புகார் கூறப்பட்டது. அதுபற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில், இது நடிகைகளின் நகைகள் அல்ல என்றும் மதிப்பை மிக உயர்த்தி கூறியிருக்கிறார்கள் என்றும் மறுத்தார்.
துப்பாக்கி சூடு–பதற்றம்
இதற்கிடையில் இந்த பட விழாவின் 3–வது நாள் நிகழ்ச்சியில் மற்றொரு பரபரப்பு சம்பவம் அரங்கேறியது. பிரமாண்ட அரங்கு ஒன்றில் ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் வேட்ஜ் மற்றும் ஆஸ்திரியாவை சேர்ந்த நடிகர் ஆட்டியூல் ஆகியோர் பார்வையாளர்கள் மத்தியில் தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளித்துக் கொண்டிருந்தனர். இதை கண்டுகளிக்க அரங்கில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது பார்வையாளர் பகுதியில் இருந்த ஒரு நபர் திடீரென்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் 2 முறை சுட்டார். அவருடைய கையில் வெடிகுண்டும் வைத்திருந்தார். இதனால் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
நடிகர்கள் ஓட்டம்
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த 2 நடிகர்களும், பார்வையாளர்களும் ஓட்டம் பிடித்தனர். உடனே பாதுகாவலர்கள் பாய்ந்து சென்று துப்பாக்கியால் சுட்ட நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபரை போலீசார் வெளியே அழைத்துச் சென்றனர். இந்த நபர் வைத்திருந்த துப்பாக்கி, வெடிகுண்டு மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிறகு அவற்றை பரிசோதித்ததில், துப்பாக்கி, வெடிகுண்டு ஆகியவை போலியானவை என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதனை அடுத்து பதற்றம் அடங்கி நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.
No comments:
Post a Comment