
ஆனைமலை கணபதி பாளையம் பெரியார் நகரில் வசிப்பவர் தினகரன் பாக்யராஜ் (வயது31). அருகில் உள்ள மருந்து கடையில் மருந்தாளுனாராக உள்ளார். இவரது மனைவி ஜெனீபர் பொன்மலர் (28).
இவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்குமுன் திருமணம் நடந்தது. தினகரன் பாக்யராஜ் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். திருமணம் முடிந்ததும் மாமனார் வீட்டிலேயே குடி வந்துவிட்டார்.
இந்நிலையில் ஜெனீபர் பொன்மலரின் அண்ணன் ஜெயகுமார், சிறிய வீட்டில் 5 பேர் உள்ளோம். வசதி போதவில்லை. எனவே தனிக்குடித்தனம் சென்று விடுங்கள் என்று ஜெனீபர் பொன்மலரிடம் நேற்று கூறியுள்ளார்.
இதனால் ஜெனீபர் பொன்மலர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கணவர் தினகரன் பாக்யராஜிடம் தெரிவித்தார். இனி இங்கு இருக்க வேண்டாம். தேனிக்கே சென்று விடலாம் என்று கூறினார்.
மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜெனீபர் பொன்மலரை தனது மோட்டார் சைக்கிளில் தினகரன் பாக்யராஜ் பொள்ளாச்சிக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஜெனீபர் பொன்மலருக்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்தார். பின்னர் இரவு 11.30 மணிக்கு கணபதி பாளையம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிள் ஆழியாறு அம்பராம்பாளையம் பாலம் வந்தபோது மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு ஜெனீபர் பொன்மலர் கூறினார். இங்கு இருட்டாக உள்ளது. வெளிச்சத்தில் வண்டியை நிறுத்துகிறேன் என்று கணவர் கூறினார். வண்டியை நிறுத்தவில்லை என்றால் குதித்து விடுவேன் என்று மிரட்டினார்.
இதில் பயந்துபோன தினகரன் பாக்யராஜ் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். திடீரென அழுதுகொண்டே பாலத்தின் சுவற்று பகுதிக்கு ஓடினார். நில்! நில்! என்று கணவர் கத்தினார். காதில் வாங்கிக்கொள்ளாத ஜெனீபர் பொன்மலர் 40 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து குதித்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த தினகரன் பாக்யராஜ் செய்வதறியாமல் தவித்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். 108 ஆம்புலன்சு விரைந்து வந்தது.
இரவு நேரம் என்பதால் ஜெனீபர் பொன்மலரை தேடுவதில் சிறிது சிக்கல் ஏற்பட்டது. எனினும் அவரை கண்டுபிடித்தனர். 40 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்ததால் நேரடியாக பாறையில் தலைமோதி ரத்தவெள்ளத்தில் தண்ணீரில் கிடந்தார்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிக்சை அளித்தும் பலனின்றி ஜெனீபர் பொன்மலர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
No comments:
Post a Comment