Sunday, 1 June 2014

ஆசிட் வீசி காதலியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை: டெல்லி கோர்ட்டு தீர்ப்பு



புதுடெல்லி, ஜூன். 1–
இளம் பெண்கள் மீது ஆசிட் வீசப்படும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் காதலியை ஆசிட் வீசி கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:–
டெல்லியை சேர்ந்தவர் அஜய்பாரதி. இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். தனது காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கருதினார். இது தொடர்பாக அவர் காதலியுடன் அடிக்கடி சண்டை போட்டார்.
கடந்த 2006–ம் ஆண்டு ஜனவரி 20–ந்தேதி காதலி மீது அஜய்பாரதி ஆசிட்டை வீசி தாக்கினார். இதில் 40 சதவீதம் எரிந்த நிலையில் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு வாரத்துக்கு பிறகு அவர் இறந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அஜய் பாரதியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு டெல்லி கோர்ட்டில் நடந்தது.
ஆசிட் வீசி காதலியை கொன்ற வழக்கில் வாலிபர் அஜய் பாரதிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்த்து வழங்கியது. டெல்லி கூடுதல் செசன்ஷ் நீதிபதி ராஜேஷ்குமார் கோயல் அளித்த தீர்ப்பு வருமாறு:–
ஆசிட் வீச்சு சம்பவம் மிகவும் கொடூரமானது. ஆசிட்டை வீசி தாக்குவது இந்தியாவில் அதிகரித்து வரும் சம்பவமாகிவிட்டது. பெரும்பாலும் பெண்களுக்கு எதிராகத்தான் இது மாதிரியான சம்பவம் நடக்கிறது. குறிப்பாக இளம் பெண்கள், திருமணத்தை நிராகரிப்பவர்கள், வரதட்சனை கொடுமையில் பாதிக்கப்படுவர்களுக்கு ஆசிட் வீச்சு நடக்கிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
குற்றவாளியான அஜய் பாரதி திட்டமிட்டு இந்த செயலை செய்துள்ளார். இதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கை சோகத்தில் முடிந்தது. இதனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment