Tuesday, 26 August 2014

இங்கிலாந்தில் ஐஸ் வாளிக் குளியலில் ஈடுபட்ட வாலிபர் மரணம்

இங்கிலாந்தில் ஐஸ் வாளிக் குளியலில் ஈடுபட்ட வாலிபர் மரணம்
இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் செயல்பட்டுவரும் மோட்டார் நியுரான் நோய் அமைப்பு சங்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக சமீபகாலத்தில் ஐஸ் வாளிக் குளியல் என்ற நிகழ்ச்சி இணையதளம் மூலம் பிரபலமாகத் தொடங்கியது. எம்என்டி என்று குறிப்பிடப்படும் இத்தகைய நரம்புக் கோளாறுகள் ஒரு மனிதனின் பேசுதல், உணவுப் பயிற்சி மற்றும் உடல் பொது இயக்கம் போன்ற அனைத்து தன்னார்வ தசை செயல்பாடுகளைப் பாதித்து இறுதியில் மரணத்தை உருவாக்கும் தன்மையைக் கொண்டது.

இந்த அமைப்பிற்கு நிதி திரட்டும்விதமாக பிரபலமாகிவரும் இந்தக் குளியலில் இதுவரை இங்கிலாந்து அமைப்பிற்கு 2,50,000 பவுண்டுகளும், அமெரிக்க அமைப்பிற்கு 62.5 மில்லியன் டாலர்களும் வசூலாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது. விக்டோரியா பெக்காம், பிரபல மாடல் காரா டெலிவிங்னே, வோக் பத்திரிகை எடிட்டர் அன்னா வின்டோர், பில் கேட்ஸ், ஒபரா வின்ப்ரே, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் போன்றோரும் இந்தக் குளியலில் பங்கு பெற்றுள்ளனர்.

அந்த வகையில் இங்கிலாந்தில் கடந்த ஞாயிறன்று ப்ரஸ்டன்ஹில் பகுதியில் உள்ள நீர்ப்பரப்பில் இந்த ஐஸ் வாளிக் குளியல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டதாகக் கருதப்பட்ட கேமரூன் லங்காஸ்டர் என்ற 18 வயது வாலிபன் நேற்று பிணமாக மீட்கப்பட்டுள்ளான். அதேபோல் இந்த நிகழ்ச்சி கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராகக் கருதப்பட்ட 27 வயது நிரம்பிய கோரே கிரிபின் என்ற அமெரிக்கர் கடந்த வாரம் மாசாசுசெட்சில் நடைபெற்ற ஒரு நீச்சல் விபத்தில் இறக்கநேரிட்டது இந்த நிகழ்ச்சியாளர்கள் மத்தியில் சோகத்தை உருவாக்கியிருந்தது.

ஏற்கனவே பிரபலங்கள் இதன்மூலம் நிதி திரட்டுவதற்கு பதிலாக தங்களுக்கான விளம்பர நிகழ்ச்சியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இத்தகைய மரணங்கள் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் குறித்த சந்தேகத்தை மக்களிடையே எழுப்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment