Thursday, 10 July 2014

குண்டு வீசி 37 பேரை கொன்ற இஸ்ரேல்


காஸா மீது குண்டு வீசி 37 பேரை இஸ்ரேல் கொன்று குவித்தது. இதையடுத்து இஸ்ரேல் மீது காஸா ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியது.
மோதலின் பின்னணி
இஸ்ரேல் நாட்டில் எல்லையில் உள்ள காஸா, ஹமாஸ் (பாலஸ்தீன சன்னி முஸ்லிம் பிரிவினர்) தீவிரவாதிகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இதை பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி என ஐ.நா. சபை 2012–ம் ஆண்டு அறிவித்தது. காஸா பகுதியை ரமல்லாவை தலைமையிடமாக கொண்டு ஆளும் பாலஸ்தீன அரசு, தனது பகுதியாக்குமாறு கோரி வந்துள்ளது. ஆனால் அது நடக்கவில்லை.
இந்த நிலையில், இஸ்ரேலில் ஒரு யூத மதப்பள்ளியில் படித்து வந்த 3 வாலிபர்கள் கடந்த ஜூன் மாதம் 12–ந் தேதி கடத்தி, கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ஹமாஸ் தீவிரவாதிகள்தான் காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேடடன்யாஹூ குற்றம் சாட்டியதுடன், அதற்கு உரிய விலையை அவர்கள் கொடுப்பார்கள் என்றும் கூறினார். அடுத்த சில தினங்களில் பாலஸ்தீன வாலிபர் முகமது அபு குதாய்ர் என்பவர் ஜெருசலேமில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவங்களை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன.
குண்டுமழை
காஸா மீது இஸ்ரேல் விமானங்கள் நேற்று முன்தினம் குண்டு வீசி தாக்குதல்கள் நடத்தின. நேற்றும் இந்த தாக்குதல் நீடித்தது. இந்த தாக்குதல்களால் காஸா முனை பகுதியில் தொடர்ந்து குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதில் கட்டிடங்கள் அதிர்ந்தன.
இந்த தாக்குதல்களில் குறைந்தது 37 பேர் பலியானதாகவும், 70 பேர் காயம் அடைந்ததாகவும் காஸா சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. பலியானவர்களில் பலர் பொதுமக்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களில் 4 பேர் பெண்கள், 5 பேர் குழந்தைகள் என காஸா சுகாதாரத்துறை கூறுகிறது. இந்த தாக்குதல் நீண்ட தாக்குதலின் தொடக்கம்தான் என இஸ்ரேல் கூறுகிறது.
காஸாவின் வடக்கு பகுதியில் உள்ள பெயட் ஹனவுன் என்ற இடத்தில் ஹமீஸ் ஹமாத் என்ற தீவிரவாதி, அவரது இரு சகோதரர்கள், பெற்றோர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இதை ஹமாஸ் ஊடகம் மற்றும் காஸா உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
ராக்கெட் வீச்சு
பதிலுக்கு காஸாவும் இஸ்ரேல் நகரங்கள் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியது. தெற்கு இஸ்ரேல் பகுதியில் 4 ராக்கெட்டுகள் போய் விழுந்ததாக தகவல்கள் கூறுகின்றன. எனினும் இதில் பலி விவரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.
மற்றொரு தகவல் டெல் அவிவ் நகர் மீதும், அதன் சுற்றுப்புறங்கள் மீதும் ஹமாஸ் 5 ராக்கெட்டுகளை வீசியதாகவும், ஆனால் அவற்றை இஸ்ரேல் இடைமறித்து முறியடித்து விட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

No comments:

Post a Comment