
பிறந்த குழந்தையை கண் இமை போல் காப்பாற்ற வேண்டிய தாய் அதனை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி பெருமாள் பள்ளியைச் சேர்ந்த தம்பதி ஈஸ்வர் ரெட்டி–மோகனா. இவர்கள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கலையரங்கத்தில் பணி செய்து வருகிறார்கள்.
இவர்களுக்கு ஏற்கனவே 1½ வயதில் பிந்துலதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மோகனா 2–வது கர்ப்பம் ஆனார்.
இந்த முறை தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும், அதன் பின் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மோகனா மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார்.
ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2–வது பிரசவத்திலும் அவருக்கு பெண் குழந்தையே பிறந்தது. இதனால் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். நள்ளிரவு மோகனா மாமியார் எழுந்து பார்த்த போது பிறந்த 12 நாள் ஆன பெண் குழந்தையை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ஈஸ்வர்ரெட்டி போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில் வீட்டு தண்ணீர் தொட்டியில் குழந்தை பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஆண் குழந்தை பிறக்காததால் மன உளைச்சல் ஏற்பட்டு குழந்தையை தாய் மோகனாவே தண்ணீர் தொட்டியில் வீசி கொன்றது தெரிய வந்தது.
மோகனாவை போலீசார் கைது செய்தனர். அவள் மனநிலை சரியில்லாதது போல் பேசினார். அவர் கூறும் போது, ‘‘என் கையில் இருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டது. என்ன நடந்தது என்று எனக்கு தெரியாததால் இது பற்றி யாரிடம் சொல்லவில்லை’’ என்றார்.
No comments:
Post a Comment