Sunday, 9 February 2014

மதினா ஓட்டலில் பயங்கர தீ விபத்து 15 பேர் உடல் கருகி பலி

மதினா ஓட்டலில் பயங்கர தீ விபத்து: புனித யாத்திரை வந்த 15 பேர் உடல் கருகி பலி
சவுதி அரேபியாவில் உள்ள மதினா நகரில் முஹம்மது நபியின் நினைவிடம் அமைந்துள்ளது. அவர் பிறந்த மக்கா நகரம், நபித்துவம் அருளப்பெற்ற 'ஹிரா' மலைக்குன்று, இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்கொண்டு வீழ்த்திய போர்க்களங்கள் மற்றும் இஸ்லாமிய பிரசாரம் செய்த பிற பகுதிகளை தரிசிப்பதற்காக உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் 'உம்ரா' எனப்படும் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.

அவ்வகையில் இந்த ஆண்டின் உம்ராவுக்காக மதினா நகருக்கு ஏராளமான முஸ்லிம் மக்கள் வந்துள்ளனர். அவர்களில் சுமார் 700 பேர் இஷ்ரக் அல் மதினா ஓட்டலில் தங்கியுள்ளனர். நேற்றிரவு அந்த ஓட்டலின் ஒரு பகுதியில் திடீரென்று தீ பிடித்தது. மளமளவென்று தீ பரவியதால் அறைகளில் தங்கியிருந்த மக்கள் பீதியுடன் அலறியபடி வெளிவாசலை நோக்கி ஒடத் தொடங்கினர்.

இதனால், அனைத்து மாடியிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, உயிர் பிழைக்கும் முயற்சியில் சிலர் மாடியில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றனர். விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புப் படை ஹெலிகாப்டர்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் ஓட்டலுக்குள் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதற்குள் தீயின் கோர நாக்கில் சிக்கிய 15 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இவர்கள் அனைவரும் எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. படுகாயமடைந்த 130 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி என்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

ஓட்டலின் ஒரு பகுதியில் ஏற்பட்ட மின் கசிவால் இந்த விபத்து நேர்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயை அணைப்பதற்காக மீட்புப் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்

No comments:

Post a Comment