Monday, 10 February 2014

பொதுக்கூட்ட மதுபான விற்பனையில் தே.மு.தி.க.,வை விஞ்சியது பா.ஜ


விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில், கடந்த, 2ம் தேதி, தே.மு.தி.க., மாநாடு நடந்தது. அன்றைய தினம், விழுப்புரம் மாவட்டத்தில், 7 லட்சம், "குவாட்டர்'களுக்கு நிகரான அளவுக்கு, 4.9 கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள் விற்பனையாகின.

ரூ.6.5 கோடி : நேற்று முன்தினம், சென்னை, வண்டலூரில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தை ஒட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, "டாஸ்மாக்' கடைகளில், 9 லட்சம், "குவாட்டர்'களின் நிகரான அளவுக்கு, 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்றுள்ளன. "டாஸ்மாக்' நிறுவனம், தன் நிர்வாக வசதிக்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தை வடக்கு, தெற்கு என, இரண்டாக பிரித்துள்ளது.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில், தாம்பரம், குரோம்பேட்டை, ஸ்ரீபெரும்பதூர், சோழிங்கநல்லூர் தாலுகாக்கள்; தெற்கு மாவட்டத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் தாலுகாக்களும் உள்ளன. வடக்கு மாவட்டத்தில், 164; தெற்கில், 180 என, மொத்தம், 324 "டாஸ்மாக்' கடைகள் உள்ளன. செங்கல்பட்டு தாலுகா, வண்டலூரில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற, மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு வந்த பலர் மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை, உத்திரமேரூர் உள்ளிட்ட, பல சுற்றுலா தலங்களுக்கும் சென்றனர். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், மது விற்பனை அமோகமாக நடந்தது. வடக்கு மாவட்டத்தில், 3 கோடி ரூபாய்; தெற்கு மாவட்டத்தில், 3.5 கோடி ரூபாய் என, மொத்தம், 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகின.

வழக்கமாக ரூ.4.5 கோடி : இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""வடக்கு, தெற்கு மாவட்டங்களில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மொத்தமாக, 4.5 கோடி ரூபாய்க்கு, மது வகைகள் விற்பனையாகும். மோடி கூட்டத்தை முன்னிட்டு, வண்டலூர், மறைமலை நகர், காட்டாங்கொளத்தூர், செங்கல்பட்டு பகுதிகளில், வழக்கத்தை விட அதிக அளவில், மதுபானங்கள் விற்றன. இந்த இரு மாவட்டங்களில், சனிக்கிழமை மட்டும், 2 கோடி ரூபாய் விற்பனை அதிகரித்து, 6.5 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது.''இவ்வாறு, அவர் கூறினார்.

கடையை தேடி தேடி...! : தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள, "டாஸ்மாக்' கடைகளால், அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுவதால் அவற்றை மூட, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிளில், நெடுஞ்சாலையொட்டி இருந்த கடைகள், ஏற்கனவே, குடியிருப்பு பகுதிகளுக்கு மாற்றப்பட்டு விட்டன. மோடி கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள், சாலையோரங்களில் கடைகள் இல்லாதது கண்டு, உள்ளூர் நபர்களிடம், கடை பற்றிய விவரங்களை கேட்டு தேடிச்சென்றனர்.

No comments:

Post a Comment