Tuesday, 25 February 2014

கர்ப்ப காலத்தில் பெண்கள் மது அருந்துவது தண்டனைக்குரிய குற்றம்: இங்கிலாந்து கோர்ட் அறிவிப்பு

கர்ப்ப காலத்தில் பெண்கள் மது அருந்துவது தண்டனைக்குரிய குற்றம்: இங்கிலாந்து கோர்ட் அறிவிப்பு
இங்கிலாந்தில் மது அருந்தும் பழக்கமுடைய பெண்கள் கர்ப்பகாலத்திலும் இதனைத் தொடருகின்றனர். இதனால் கருவிலிருக்கும் குழந்தை பாதிப்புடன் பிறப்பது அங்கு அதிகரித்து வருகின்றது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும் இதுபோல் பச்சிளம் குழந்தைகள் தாயின் மதுப் பழக்கத்தினால் பாதிப்புடன் பிறப்பது 50 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

2012-2013-ம் ஆண்டின் அறிக்கையின்படி 313 குழந்தைகள் மதுவின் பாதிப்புடன் பிறந்துள்ளது. தற்போது பிறக்கும் குழந்தைகளில் நூற்றில் ஒன்று மதுவின் பாதிப்பினால் ஏற்படும் கோளாறுடன் பிறப்பதாக அரசு சுகாதாரப் பிரிவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய பாதிப்புடன் பிறந்த ஆறு வயது பெண் குறித்த வழக்கு ஒன்று இங்கிலாந்தின் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வந்தது. இந்தக் குழந்தையை கர்ப்பத்தில் சுமந்திருந்தபோது அவளது தாயார் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இந்தப் பெண் மூளைக் கோளாறுடன் பிறந்ததாகவும், இதுபற்றி அந்தத் தாய்க்கும் தெரியும் என்று இவரது வழக்கில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்தே கர்ப்பகாலத்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது குற்றமாகக் கருதப்படும் என்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற வரலாற்றிலேயே இந்த தீர்ப்பு ஒரு மைல்கல் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கை ஒத்த மற்றொரு சம்பவத்தில் ஸுயு பிரெட் என்பவர் தத்தெடுத்து வளர்க்கும் 15 வயதுடைய கிளன் என்ற சிறுவன் தாயின் குடிப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்டவன் ஆவான். இந்த சிறுவன் கண் பார்வை இழந்து இயக்கக் குறைபாடுகளுடன் நான்கு வயது சிறுவனின் மனநிலையையே கொண்டிருக்கின்றான் என்று அவனது வளர்ப்புத்தாய் தெரிவிக்கின்றார்.

கர்ப்பகாலத்தில் மது அருந்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பதே சிசுவைப் பாதுகாக்க சிறந்த வழியாகும் என்று மனநல மருத்துவ ஆலோசகர் ராஜா முகர்ஜி தெரிவித்துள்ளார். குழந்தையின் பாதுகாப்பு பற்றி ஆபத்தில்லாத உத்திரவாதம் பெறவேண்டும் என்று நினைத்தால் மதுவைத் தவிர்ப்பதே சிறந்த வழியாகும் என்று அவர் குறிப்பிடுகின்றார்.

No comments:

Post a Comment