Sunday, 9 February 2014

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மதவாதம் தலைதூக்கும்: பிரகாஷ்கரத்

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மதவாதம் தலைதூக்கும்: பிரகாஷ்கரத் பேச்சு

கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேடு மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்டு பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்தினால், அது மதவாதம், முதலாளித்துவம் தலைதூக்க காரணமாகி விடும். பா.ஜனதாவையும், காங்கிரசையும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டுமென்றால் அவ்விரு கட்சிகளும் இல்லாத மூன்றாவது அணி அவசியம். குஜராத்தை முன்மாதிரி என்று மோடி சொல்லி வருகிறார்.

மோடியின் ஆட்சியில்தான் 2002-ம் ஆண்டு ஆயிரக்கணக்கான சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். மக்களுக்கு சாதகமான, மதச்சார்பற்ற கொள்கைகளை உருவாக்குவதற்கு ஏற்ற அரசை அமைப்பதற்கு, காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு எதிராக நாம் போராட வேண்டும். இந்தியாவில் மதவாத சக்திகளை, ஊழலை தனது 10 ஆண்டு கால ஆட்சியில் கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறி விட்டது. மதவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இடதுசாரிகள் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும்.

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதற்கு திரிணாமுல் காங்கிரசுக்கு நேரம் கனிந்து வந்துள்ளது. ஏற்கனவே பா.ஜனதாவுடன் திரிணாமுல் காங்கிரஸ் 1998 முதல் 2001 வரை கூட்டணி அமைத்து இருந்தது. அப்போது மம்தா பானர்ஜிதான் ரெயில்வே மந்திரி. பின்னர் அந்த கூட்டணியில் இருந்து அவர் வெளியேறி விட்டார். குஜராத் முதல்-மந்திரியாக மோடி வந்த பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மம்தா கட்சி சென்று விட்டது. நிலக்கரித்துறை அமைச்சகத்தையும் பெற்றது.

2009-2011 ஆண்டுகளில் காங்கிரசுடன் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. இப்போது மீண்டும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயகக்கூட்டணியில் சேரும் நேரம் வந்து விட்டது. நம்மை பொறுத்தமட்டில் மாற்று அரசு என்பது புதிய பிரதமர் என்று மட்டுமே அர்த்தம் அல்ல. மாற்று என்பது மக்களுக்கு சாதகமான கொள்கைகளை செயல்படுத்துவதுதான். பிரதமரை தேர்வு செய்வது என்பது இரண்டாம் கட்டம்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment