புதுடில்லி: 'ஓரினச்சேர்க்கை குற்றமே என, ஏற்கனவே அளித்த தீர்ப்பை, மறு ஆய்வு செய்ய முடியாது' என, சுப்ரீம் கோர்ட், திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஓரினச்சேர்க்கை தொடர்பாக, டில்லி ஐகோர்ட், 2009ல், பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், கூறப்பட்டதாவது:
ஓரினச்சேர்க்கை குற்றமாகாது. 18 வயதுக்கு மேற்பட்ட இருவர், மனம் இசைந்து, உறவில் ஈடுபடுவதை, குற்றமாக கருத முடியாது. அப்படி குற்றமாக கருதினால், அது, அவர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல். ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும், இந்திய தண்டனை சட்டத்தின், 377வது பிரிவு, செல்லாது. இவ்வாறு, அந்த உத்தரவில் கூறப்பட்டது. இது, நாடு முழுவதும் உள்ள, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. டில்லி ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, பல்வேறு அமைப்புகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த டிசம்பரில், 'ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமே. இதை, குற்றமாக கருதும், இந்திய தண்டனை சட்டத்தின், 377வது பிரிவு செல்லும்' என, தீர்ப்பளித்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு, ஓரினச் சேர்க்கையாளர்களிடையே, கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. மத்திய அரசும், 'ஓரினச் சேர்க்கை குற்றம் என்ற தீர்ப்பை, மறு ஆய்வு செய்ய வேண்டும். இந்த தீர்ப்பு, ஓரினச் சேர்க்கையாளர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது' என, கருத்து தெரிவித்தது.
இதையடுத்து, 'நாஜ் பவுண்டேஷன்' என்ற தன்னார்வ அமைப்பும், ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களும், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை, மறு ஆய்வு செய்யக்கோரி, மனுக்கள் தாக்கல் செய்தன.
அந்த மனுக்களில் கூறப்பட்டதாவது: 'ஓரினச் சேர்க்கை குற்றமாகாது' என, டில்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பை அடுத்து, ஓரினச் சேர்க்கையாளர்கள், பகிரங்கமாக, தங்களை அடையாளப் படுத்திக் கொண்டனர். தற்போது, 'ஓரினச்சேர்க்கை குற்றம்' என, தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளதால், தங்களை பகிரங்கமாக அடையாளப் படுத்தியவர்களுக்கு, சட்ட ரீதியான நெருக்கடி ஏற்படும். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பில், ஏராளமான தவறுகள் உள்ளன. இந்திய தண்டனை சட்டத்தின், 377வது பிரிவு, ஓரினச் சேர்கையாளர்களின் உடல் நலத்துக்கான உரிமையை மீறும் வகையில் உள்ளது. அவர்கள், எய்ட்ஸ் தடுப்பு சிகிச்சை உள்ளிட்ட, எந்த சிகிச்சையையும், மேற்கொள்வதற்கு, இந்த சட்டம், தடையாக உள்ளது. இதே கருத்தை, மத்திய சுகாதார அமைச்சகமும், சுப்ரீம் கோர்ட்டில், ஏற்கனவே வலியுறுத்தியுள்ளன. இவ்வாறு, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால், ஆயிரக்கணக்கான ஓரினச்சேர்க்கையாளர்கள் பாதிக்கப்படுவர். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள், எச்.எல்.டாட்டூ, எஸ்.ஜே.முகோபத்யாய ஆகியோர் அடங்கிய,'பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஓரினச்சேர்க்கை குற்றமே. இது தொடர்பாக ஏற்கனவே அளித்த தீர்ப்பை, மறு ஆய்வு செய்ய முடியாது. ஏற்கனவே அளித்த தீர்ப்பில், மீண்டும் தலையிடுவதற்கு, எங்களுக்கு எந்த காரணமும் இல்லை. வேண்டுமானால், இது தொடர்பான சட்டத்தில், அரசே, மாற்றம் செய்யலாம்' என கூறி, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு, நாடு முழுவதும் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்களிடையே, அதிர்ச்சியை அளித்துள்ளது.
*
No comments:
Post a Comment