Thursday, 10 July 2014

மகாத்மா காந்தி கொலை வழக்கு ஆவணம் அழிக்கப்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சிகள் அமளி


மகாத்மா காந்தி கொலை வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி விளக்கம் அளிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் நேற்று டெல்லி மேல்–சபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
காந்தி கொலை ஆவணம் அழிப்பு
பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்றவுடன் நீண்ட காலமாக உள்துறை அமைச்சகத்தில் வைக்கப்பட்டு இருந்த பல்வேறு பழைய ஆவணங்கள் அழிக்கப்பட்டன. இதில் தேசத்தந்தை மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களும் அழிக்கப்பட்டதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதுதொடர்பாக டெல்லி மேல்–சபையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர்.
பிரதமர் பதில் அளிக்க வேண்டும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் பி.ராஜீவ் பேசுகையில், மோடி உத்தரவின்பேரில் உள்துறை அமைச்சகத்தில் 1½ லட்சம் ஆவணங்கள் அழிக்கப்பட்டதாகவும், அதில் மகாத்மா காந்தி கொலை தொடர்பான முக்கிய ஆவணம் மாயமாகி உள்ளதாகவும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆவணங்களை அழிக்கும் நடவடிக்கையில் பிரதமர் ஏன் முனைப்பு காட்டுகிறார்? என்று தெரியவில்லை. நாட்டின் வரலாற்றை மாற்ற இந்த அரசு முயற்சி செய்கிறதோ? என பயமாக இருக்கிறது. காந்தி படுகொலை வழக்கில் தொடர்புடைய மதவாத சக்திகளின் ஆதாரங்களை அரசு அழிக்க நினைக்கிறது’ என்று குற்றம் சாட்டினார்.
இதனை மறுத்த சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், ‘இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறேன். குற்றச்சாட்டில் உண்மை இல்லை’ என்று தெரிவித்தார். ஆனால் மந்திரியின் கருத்தை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்து விட்டன.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகந்து சேகர் ராய் பேசுகையில், பிரதமர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. எனவே அவர் நேரடியாக வந்து பதில் அளிக்க வேண்டும். குற்றச்சாட்டு பொய்யாக இருந்தால் அதனை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
கடும் அமளி
மேல்–சபை துணை சபாநாயகர் பி.ஜெ.குரியன், ‘இது விஷயத்தில் மந்திரியின் பதிலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், இதுதொடர்பாக சபையில் அறிக்கை வெளியிடலாம்’ என்று தெரிவித்தார்.
ஆனால் பி.ஜெ.குரியனின் நடவடிக்கையில் திருப்தி அடையாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சபை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment