வாஷிங்டன்: இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களில் மிக மோசமான அதிபர் ஒபாமாதான் என ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. அமெரிக்க அதிபர்களில் சிறப்பாக செயல்பட்டவர்கள், மிக மோசமாக செயல்பட்டவர்கள் குறித்த கருத்துக்கணிப்பை குயினிபியாக் பல்கலைக்கழகம் நாடு முழுவதும் நடத்தியது. இதில் 2ம் உலகப் போருக்கு பின்னர் அமெரிக்க அதிபர்களாக வந்தவர்களில் மிக மோசமான அதிபர் ஒபாமாதான் என 33 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பொருளாதாரம், வெளியுறவு கொள்கை, தீவிரவாதம், சுற்றுச்சூழல், சுகாதாரம் ஆகிய பிரச்னைகளில் ஒபாமா அரசு திறம்பட செயல்படவில்லை என 54 சதவீதம் பேரும், நிர்வாகத்தின் மீது அவர் போதிய கவனம் செலுத்தவில்லை என 48 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். 58 வயதாகும் ஒபாமா தற்போது 2வது முறையாக அதிபராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசமான அதிபர்களில் ஒபாமாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஜார்ஜ் புஷ். 28 சதவீதம் பேர் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். கடந்த 2012 தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சியை சேர்ந்த மிட் ரோம்னி வெற்றி பெற்றிருந்தால் நாட்டின் நிலை சிறப்பாக இருந்திருக்கும் என 45 சதவீதம் பேரும், மோசமாக இருந்திருக்கும் என 38 சதவீதம் பேரும் கருத்து கூறி இருக்கின்றனர். இரண்டாம் உலக போருக்கு பிந்தைய அமெரிக்க அதிபர்களில் சிறப்பாக செயல்பட்டவர் என்ற பெருமை ரொனால்டு ரீகனுக்கு கிடைத்துள்ளது. 35 சதவீதம் பேர் இந்த கருத்தை கூறியுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் பில் கிளின்டன்(18 சதவீதம்), ஜான் எப் கென்னடி(15 சதவீதம்) ஆகிய அதிபர்கள் இருக்கின்றனர். ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர்களிலேயே சிறந்தவர் கிளின்டன் என 34 சதவீதம் பேரும் ஒபாமா, கென்னடி சிறந்தவர்கள் என 18 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment