புதுடில்லி : கணவரையும், அவரது குடும்பத்தினர்களையும் பழிவாங்குவதற்காக மனைவிகள் அல்லது பெண்கள் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் போதிய ஆதாரமின்றி இந்த சட்டப்பிரிவின்கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் 'பெஞ்ச்' புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது : பொதுவாக வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு 498-ஏ என்பது, அதன் கீழ் குற்றம்சாட்டப்பவர் ஜாமீன் இன்றி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்பதாகும். இதனால் கணவருடன் வாழப்பிடிக்காமல் விவாகரத்து பெற விரும்பும் மனைவிகளும், கணவர் வீட்டாரை பழிவாங்க நினைக்கும் பெண்களும் இந்த சட்டத்தை ஆயுதமாக கையில் எடுத்து தவறாக பயன்படுத்துகின்றனர்;
ஒரு பெண், கணவர் வீட்டார் மீது வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கும் போது அவரது கணவர் மட்டுமின்றி உறவினர்களும் கைது செய்யப்படுகின்றனர்; சில வரதட்சணை கொடுமை வழக்குகளில், படுத்த படுக்கையாக இருக்கும் கணவரின் தாத்தா, பாட்டி, பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருக்கும் கணவரின் சகோதரிகள் உள்ளிட்டோரும் கைது செய்யப்படுகின்றனர்; அப்பெண்ணின் புகாரை ஏற்று போலீசாரும் அனைவரையும் கைது செய்கின்றனர்; இது வன்மையாக கண்டிக்கதக்கது; குற்றம்சாட்டப்பட்டவரை முதலில் கைது செய்து விட்டு தான் பின்னர் கோர்ட்டில் குற்றத்தை நிரூபிக்க முயற்சிக்கின்றனர்;
ஆதாரம் இல்லாமல் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது; இது தொடர்பாக, அனைத்து மாநில போலீசாருக்கும் உத்தரவிட, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது; சில வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும் பட்சத்தில், அவர்களை கைது செய்ததற்கான காரணத்தை நீதிபதி முன் போலீசார் குறிப்பிட வேண்டும்; வெறும் குற்றச்சாட்டுக்களை வைத்து மட்டும் ஒருவரை குற்றவாளி என முடிவு செய்து, கைது செய்யக் கூடாது; போதிய காரணம் இல்லாமலும், விசாரணை இல்லாமலும் யாரையும் கைது செய்யக் கூடாது என போலீசாரை கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்;
சட்டப்பிரிவு 498-ஏ.,ன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார். இவ்வாறு நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment