Saturday, 19 October 2013

10 மாதமாக பிணத்துடன் வசித்த குடும்பத்தினர்

நாகர்கோவிலில் 10 மாதமாக பிணத்துடன் வசித்த குடும்பத்தினர்

நாகர்கோவில் ராமவர்மபுரத்தை சேர்ந்த செல்லம் பிள்ளை (வயது 53). பி.டெக் படித்துள்ள இவருக்கு திருமணம் ஆகவில்லை.
வீட்டில் தனது தாயார் சரோஜினியுடன் வசித்து வந்தார். இவரது சகோதரி உமா தேவி (56) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து மகன் சிவராமுடன் (26) தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.
செல்லம்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது கிடையாது. செல்லம்பிள்ளையின் தந்தை சுப்பிரமணிய பிள்ளையின் ஓய்வூதிய பணத்தில் இவர்களது குடும்பம் வாழ்ந்து வந்தது.
ஓய்வூதியம் பெறுவதற்கான சான்றிதழ்களை கொடுக்காததால் அந்த பணமும் நின்று போகவே கடந்த சில மாதங்களாக இவர்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டனர். நேற்று மதியம் சிவராம் பசி தாங்க முடியாமல் பக்கத்து வீட்டு பெண்ணிடம் ‘நாங்கள் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது, ஏதாவது பண உதவி செய்யுங்கள்’ என்றார். இவ்வளவு நாளும் பேசாதவர் பணம் கேட்கிறாரே என கருதிய அந்த பெண் ரூ.500 கொடுத்தார்.
உடனே சிவராம் கடைக்கு சென்று உணவு பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது பணம் கொடுத்த பெண்ணும் வீட்டுக்குள் சென்று வீட்டில் யார்–யார் இருக்கிறீர்கள்? என விசாரித்தார். அதற்கு சிவராம் நான், எனது தாய் உமாதேவி, மாமா செல்லம் பிள்ளை, பாட்டி சரோஜினி ஆகியோர் இருக்கிறோம் என்றார். ஆனால் அங்கு உமா தேவியை காணவில்லை. இதைப்பார்த்த பெண் உனது தாய் எங்கே? என கேட்டார்.
அதற்கு வீட்டின் ஒரு அறையை காட்டிய சிவராம் எனது தாய் இறந்து விட்டார் என கூறியவாறு, அறைக்குள் துணி மூட்டைக்குள் உமா தேவி பிணமாக கிடப்பதை காட்டினார். இதைப்பார்த்த பெண் அதிர்ச்சியில் உறைந்து போனார். அங்கிருந்து ஓட்டம் பிடித்த பெண் நேராக கவுன்சிலர் விக்ரமனிடம் விஷயத்தை சொல்ல அவர் கோட்டார் போலீசாருக்கு தகவல் கூறினார். சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. உதயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
பாழடைந்த அந்த வீட்டுக்குள் ஒரு அறையில் துணி மூட்டையில் பெண் பிணத்தை பார்த்த போலீசார் அதிர்ந்து போனார்கள். டி.எஸ்.பி. உதயகுமார், வீட்டில் இருந்த செல்லம்பிள்ளையிடம் விசாரித்த போது அவர் ஆங்கிலத்திலேயே பதில் அளித்தார். நான் பி.டெக். படித்தவன், கூடைப்பந்து வீரரும் கூட, எனது சகோதரி உமாதேவி கடந்த டிசம்பர் மாதம் 3–ந்தேதியே இறந்து விட்டார். நானும், எனது மருமகன் சிவராமும் அவளது உடலை துணியால் மூடி வைத்திருக்கிறோம் என்றார்.
உமாதேவி எப்படி இறந்தார்? என கேட்டதற்கு, டிசம்பர் 3–ந்தேதி வீட்டிற்குள் ஒரு கட்டையான பெண் தலைவிரி கோலத்தில் கறுப்பு உருவத்துடன் காட்சி அளித்தார். இதைப்பார்த்த உமா தேவி மயங்கி விழுந்து இறந்து போனாள். எனது தந்தையும், அண்ணனும் இதுபோன்று கறுப்பு உருவத்தை பார்த்து தான் இறந்து போனார்கள் என்றார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்த போது மனநிலை பாதித்தவர் போல பேசினார்.
இதையடுத்து சிவராமிடம் விசாரித்தனர். அவரும் எனது தாய் டிசம்பர் மாதம் இறந்து விட்டார் என கூறியதோடு மனநிலை பாதிக்கப்பட்டவர் போலவே பேசினார். இறந்து போன உமாதேவியின் தாய் சரோஜினியால் எதுவும் பேச முடியவில்லை. எனவே போலீசார் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் நாகலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்தனர். சாக்கு மூட்டைக்குள் பிணமாக கிடந்த உமாதேவி உடல் அழுகி மாவு போல இருந்தது. உடல் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லக்கூடிய அளவுக்கு இல்லை. எனவே டாக்டர்களை வீட்டிற்கு வரவழைத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி இன்று காலை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர்கள் குழு வீட்டுக்கு வந்து பிரேத பரிசோதனை செய்தனர்.
இந்த அறிக்கை வரும் போது தான் உமாதேவி கொலை செய்யப்பட்டாரா? அல்லது எப்படி இறந்தார்? இறந்து எவ்வளவு நாட்கள் ஆகியிருக்கும்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment