Saturday, 19 October 2013

பண மெத்தையில் படுத்து புரண்ட கம்யூ., தலைவர்


அகர்த்தலா: திரிபுரா மாநிலத்தை சேர்ந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஒருவர், 20 லட்ச ரூபாய் பணத்தை, மெத்தை போல பரப்பி, அதில் படுத்து, தன் கனவை நினைவாக்கி கொண்டார். இது தொடர்பாக, அவர் மீது, கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, முதல்வர், மாணிக் சர்க்கார் தலைமையிலான, திரிபுரா மாநிலம், ஜோகேந்திரநகரின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சமர் ஆச்சார்ஜி. இவர் அந்த பகுதியில், கழிப்பறை அமைக்கும் கான்ட்ராக்ட் எடுத்திருந்தார். இதன் மூலம், அவருக்கு, இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. சமீபத்தில், வங்கிக்கு சென்று, தனது கணக்கிலிருந்து, 20 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து வந்து, வீட்டின் படுக்கை அறையில், மெத்தை போன்று அடுக்கினார். அந்த பணமெத்தை மீது படுத்து புரண்டு, தன் ஆசையை தீர்த்து கொண்டார். இந்த காட்சியை அவர் தன் மொபைல்போன் கேமிராவில் படம் எடுத்துள்ளார். இந்த படங்கள், எப்படியோ, தனியார் "டிவி' யில் சமீபத்தில் ஒளிபரப்பானது. இது குறித்து, சமர் ஆச்சார்ஜி குறிப்பிடுகையில், ""பண மெத்தையில் படுக்க வேண்டும், என்பது எனது நீண்ட நாள் கனவு. தற்போது, அது நிறைவேறியுள்ளது. எங்கள் கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள், ஏராளமான பணம் இருந்தாலும், எளிமையானவர்களை போல நடிப்பார்கள்.நான் அவ்வாறு இருக்க விரும்பவில்லை,''என்றார். பண மெத்தையில் படுத்து புரண்டு, அதை விளம்பரப்படுத்திய, சமர் ஆச்சார்ஜி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment