மெகபூப்நகர்: பெங்களூரிலிருந்து, ஐதராபாத் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சின், டீசல் டேங்க் வெடித்து, விபத்துக்குள்ளானதில், 45 பயணிகள், உடல் கருகி பரிதாபமாக பலியாயினர். பலியானவர்களில் பெரும்பாலானோர், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, சொந்த ஊருக்கு சென்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
பெங்களூரில், மிகவும் பிரபலமான ஆம்னி பஸ் நிறுவனங்களில், ஜப்பார் டிராவல்சும் ஒன்று. இந்த நிறுவனத்தின் பஸ்கள், பெங்களூரில் இருந்து, ஐதராபாத், புனே ஆகிய நகரங்களுக்கு, அதிகமாக இயக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான, அதி நவீன சொகுசு வசதிகள் அடங்கிய, 'வால்வோ' பஸ், நேற்று முன்தினம், 11:00 மணிக்கு, பெங்களூரிலிருந்து, ஐதராபாத்துக்கு புறப்பட்டது. இதில், 50 பயணிகள், டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் இருந்தனர். 'ஏசி' வசதியுடைய இந்த பஸ்சின் வெளிப்புறம், கண்ணாடியிலானவை.மணிக்கு, 120 - 130 கி.மீ., வேகத்தில் சென்ற, அந்த பஸ், நேற்று அதிகாலை, 5:10க்கு, ஆந்திர மாநிலம், மெகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள, பாளையம் என்ற பகுதியை கடந்தது. அப்போது, முன்னால் சென்ற காரை, முந்திச் செல்வதற்கு, பஸ் டிரைவர் முயற்சித்தார். அந்த கார், பஸ்சை விட, குறைவான வேகத்தில் சென்றதால், விலகிச் செல்ல, பஸ் டிரைவர் முயற்சித்தார். அப்போது, சாலையின் ஓரத்தில் இருந்த, சிறிய பாலத்தின் தடுப்புச் சுவர் மீது, பஸ் வேகமாக மோதியது.
இதில், பஸ்சின் டீசல் டேங்கில், ஓட்டை விழுந்தது. அடுத்த சில நொடிகளில், டீசல் டேங்க் வெடித்து, தீப்பிடித்தது. பஸ் முழுவதும், தீ, வேகமாக பரவியது. இதனால், அலறிய பஸ் டிரைவர், வேகமாக வெளியில் குதித்தார். அதிகாலை நேரம் என்பதால், பஸ்சில் இருந்த அனைத்து பயணிகளும், அயர்ந்து, தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு, பஸ், விபத்தில் சிக்கியது தெரியவில்லை. டிரைவரின் அருகே அமர்ந்து, தூங்கி கொண்டிருந்த கிளீனருக்கு, பஸ் தீப்பிடித்தது தெரிந்ததும், அதில் இருந்து குதிக்க முயற்சித்தார். அவரால், கதவை திறக்க முடியவில்லை. அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றின் டிரைவர், வேகமாக இறங்கி வந்து, பஸ்சின் கண்ணாடியை உடைத்து, தீக் காயங்களுடன் அலறிக் கொண்டிருந்த கிளீனரை காப்பாற்றினார். தீயின் வேகம் உக்கிரமானதும் தான், பயணிகளுக்கு, தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. பஸ்சின் முன்பக்கத்தில், ஒரே ஒரு வாசல் மட்டுமே இருந்ததால், அனைவரும் முண்டியடித்து, அந்த வாசல் வழியாக, வெளியில் செல்ல முயற்சித்தனர்.
பஸ்சின் உள்ளே, பயணிகளின் மரண ஓலங்கள் கேட்டுபடி இருந்தன. டீசல் டேங்க் வெடித்து, அதில் ஏற்பட்ட சிதறல்கள், பஸ் முழுவதும் பரவியதால், தீ ஜ்வாலை, உக்கிரமாக இருந்தது. அடுத்த சில நிமிடங்களில், மரண ஓலங்கள், மெல்ல மெல்ல அடங்கின. 30 நிமிடங்களில், பஸ், முழுவதும் தீப்பிடித்து, சாம்பலாகி விட்டது. பஸ்சின் உள்ளே இருந்த, 45 பேரும், உடல் கருகி, பரிதாபமாக பலியாகி விட்டனர். பெரும்பாலானோரின் உடல்கள், அடையாளம் காண முடியாத அளவுக்கு, எரிந்து, கரிக் கட்டைகளாகி விட்டன. காயமடைந்த டிரைவர், கிளீனர் மற்றும், ஐந்து பயணிகள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பஸ்சில் சென்ற பயணிகளில் பெரும்பாலானோர், தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக, சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள். இவர்களில் சிலர், பெங்களூரில் உள்ள, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியவர்கள்.
பெரும்பாலான உடல்கள், அடையாளம் காண முடியாத அளவுக்கு, எரிந்து விட்டதால், மரபணுச் சோதனை நடத்தினால் மட்டுமே, உடல்களை அடையாளம் காண முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மரபணுச் சோதனை நடத்தி முடிப்பதற்கு, இன்னும் சில நாட்களாகும் என்பதால், பலியானோரின் உடல்களை பெறுவதற்கு, அவர்களின் உறவினர்கள் காத்திருக்க வேண்டிய, பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
* விபத்தில் சிக்கிய பஸ்சில் பயணம் செய்தவர்களில், 33 பேர், இணையதளம் மூலம், டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததால், அவர்களுடைய முகவரி மற்றும் தொலைபேசி எண் உடனடியாக கிடைத்தது.
* பஸ் டிரைவர் பெரோஸ் கான், கிளீனர் அயாஸ், ஜப்பார் டிராவல்ஸ் உரிமையாளர், நயீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* கருகிய பஸ்சில் இருந்து, 3 வெள்ளி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment