Sunday, 27 October 2013

பாட்னா குண்டு வெடிப்பு திட்டமிட்ட சதி: நிதீஷ்குமார்


பாட்னா தொடர் குண்டுவெடிப்பு நன்கு திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட சதிவேலையாகத் தோன்றுகிறது. பிகாரின் அமைதியைக் குலைக்கவே இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இது தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம்'' என்று மாநில முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்தார்.
பாட்னா தொடர் குண்டு வெடிப்பு குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் மீனாக்ஷி லேகி கருத்து கூறுகையில், ""நரேந்திர மோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
மத்திய உளவுத்துறையும், பிகார் மாநில காவல்துறை உளவுப் பிரிவும் ஒட்டுமொத்தமாகத் தோல்வியடைந்து விட்டதையே இந்த தொடர் குண்டு வெடிப்பு காட்டுகிறது'' என்று தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பிகார் முதல்வர் நிதீஷ் குமார், ""பாஜக பேரணியில் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மத்திய, மாநில புலனாய்வு அமைப்புகளிலிருந்து இந்தத் தாக்குதல் குறித்து முன்னெச்சரிக்கை எதுவும் வரவில்லை. ஒரு பேரணிக்கு எந்தெந்த விதத்தில் பாதுகாப்பு வழங்க முடியுமோ, அந்த விதத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. எல்லா பாதுகாப்பையும் மீறி நிகழ்ந்துள்ள இந்த குண்டு வெடிப்பு எங்களுக்கு ஒரு பாடம்'' என்று தெரிவித்தார்.
ஜார்க்கண்டில் போலீஸ் சோதனை: இந்நிலையில், பாட்னா குண்டு வெடிப்பை நிகழ்த்திய குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் பிகாரின் அண்டை மாநிலமான ஜார்கண்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இத்தகவலை பிகார் மாநில காவல்துறை டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) எஸ்.என்.பிரதான் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ""தாக்குதலை நடத்துவதற்காக அவர்கள் ஜார்கண்டில் இருந்து வெடிகுண்டுகளைக் கொண்டு வந்திருக்கலாம்'' என்றார்.
இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீôர் அதிரடிச் சோதனைகளை நடத்தினர். இது குறித்து அந்த மாநில மூத்த காவல்துறை எஸ்.பி. சாகேத்குமார் சிங் கூறுகையில், ""தலைநகர் ராஞ்சியின் துர்வா பகுதியில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் கருப்பு நிற வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது'' என்றார்.

No comments:

Post a Comment