சித்தூர் மாவட்டம் குர்ரம்கொண்டா பகுதியை சேர்ந்தவர் முகம்மதுகான். இவர், அந்த பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவருக்கு 1½ வயதில் இப்ராகிம் என்ற மகன் உள்ளான். இப்ராகிமுக்கு நாக்கு வளர்ந்து கொண்டே போகிறது. அது, என்ன வியாதி என்றே தெரியவில்லை.
அவனால் சாப்பிட கூட முடியவில்லை. திரவ ஆகாரம் மட்டுமே தினமும் வழங்கப்படுகிறது. பெற்றோர் அவனை பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என டாக்டர்களாலும் கண்டுபிடிக்க முடியாமல் கைவிரித்து விட்டனர்.
இது குறித்து சிறுவனின் தந்தை முகம்மது கான் கூறியதாவது:–
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம். மகனை பரிசோதனை செய்த டாக்டர்கள், இது மிக ஆச்சரியமான நோய், இது வரை இந்த மாதிரியான நோய்க்கு யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை என்று கூறி நாக்கை அறுவை சிகிச்சை செய்து சிறிது வெட்டி எடுத்தனர். அதன்பிறகும், அவனுக்கு மீண்டும் 3 செ.மீ. அளவுக்கு நாக்கு வளர்ந்து தற்போது 9 செ.மீ. நீளம் உள்ளது. தற்போது, அவனால் பால் கூட குடிக்க முடியவில்லை.
ஐஸ்கட்டியை நாக்கில் வைத்ததும் நாக்கு சிறிதாக சுருங்குகிறது. அந்த நேரத்தில் தான் பால் உள்ளிட்ட திரவ ஆகாரத்தை வழங்குகிறோம். அவனால் பேச கூட முடியவில்லை. இதுவரை மருத்துவ சிகிச்சைக்காக மட்டும் சுமார் ரூ.5 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால், அவனுக்கு நாக்கு இன்னும் சரியாகவில்லை. மனவேதனையில் வாழ்ந்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
குர்ரம்கொண்டா அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறுகையில், இந்த சிறுவனுக்கு ஒரு புதிய வியாதி வந்துள்ளது. இதுவரை இதுபோன்ற வியாதியை பார்த்ததில்லை ரத்த நரம்புகள் அதிகமாக நாக்கு மேல் வளர்ந்துள்ளது.
இதனால்தான் சிறுவனின் நாக்கு நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது. இந்த வியாதியை குணப்படுத்த முயன்றால் சிறுவனின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றார்.
No comments:
Post a Comment