புதுடில்லி: 'குற்ற வழக்குகளில், இரண்டாண்டு மற்றும் அதற்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகளின், பதவிகளை உடனடியாக பறிக்க வேண்டும்; அது குறித்த அறிவிப்பை, லோக்சபா தலைமை செயலகம், உடனடியாக பிறப்பிக்க வேண்டும்' என, அட்டர்னி ஜெனரல் வாகன்வதி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்
சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டிருந்த பொதுநலன் வழக்கில், ஜூலை, 10ம் தேதி, கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு, அரசியல்வாதிகள் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய, எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, இடி போல் அமைந்துள்ளது. 'குற்ற வழக்குகளில் சிக்கி, இரண்டாண்டு மற்றும் அதற்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள், உடனடியாக, தங்கள் பதவியை இழக்க வேண்டும்; தற்போது நடைமுறையில் உள்ள, முறையீடு செய்வதற்கான, மூன்று மாதம் வரை அவர்கள், அப்பதவியில் தொடர்வர் என்ற முறை ரத்து செய்யப்படுகிறது' என, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த அரசியல் தலைவர்கள், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து, அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்கச் செய்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவை செல்லாததாக ஆக்க முயற்சித்தனர். அதன் படி, அவசர சட்டம் பிறப்பிக்க, மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது. ஆனால், அந்த விவகாரம், ஜனாதிபதியின் பரிசீலனையில் இருந்ததால், அவசர சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. இந்நிலையில், அவசர சட்டத்திற்கு முதலில் ஒப்புதல் தெரிவித்த பா.ஜ., பின், முடிவை மாற்றிக் கொண்டதால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலும், அவசர சட்டத்திற்கு எதிராக, திடீரென குரல் கொடுத்தார்.டில்லியில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், அவசரமாக பங்கேற்ற அவர், 'கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை செல்லாததாக ஆக்க முயற்சிக்கும், மத்திய அமைச்சரவையின், அவசர சட்ட முடிவை, தூக்கி தூர எறிய வேண்டும்' என, 'நாடகம்' ஆடினார். அதையடுத்து, உடனடியாக, அவசர சட்ட முடிவு, வாபஸ் பெறப்பட்டது. இதற்கிடையே, கால்நடை தீவன ஊழல் வழக்கில், ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் மற்றும் வேறொரு வழக்கில், மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, ராஜ்யசபா, காங்கிரஸ், எம்.பி., ரஷீத் மசூது, கால்நடை தீவன ஊழல் வழக்கில், மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, ஐக்கிய ஜனதா தளம், லோக்சபா எம்.பி., ஜெகதீஷ் சர்மா ஆகியோரின் பதவியை யார் பறிப்பது என்ற கேள்வி எழுந்தது. அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையிலும், அவர்களின் பதவி இன்னமும் பறிக்கப்படவில்லை. எம்.பி.,க்கள் பதவி பறிப்பு அதிகாரம் யாரிடம் உள்ளது என்பது குறித்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவில் ?தளிவாக குறிப்பிடப்படாததால், அது குறித்து, விளக்கம் அளிக்குமாறு, நாட்டின் தலைமை சட்ட அதிகாரியான, அட்டர்னி ஜெனரல், வாகன்வதியிடம், லோக்சபா தலைமைச் செயலகம் கருத்து கேட்டது. அதற்கு பதிலளித்த வாகன்வதி, 'தண்டனை வழங்கப்பட்ட அன்றே, மக்கள் பிரதிநிதிகள் பதவிகள் பறிக்கப்பட வேண்டும்; அன்று முதலே, அவர்கள் பதவியை இழப்பர்' என, பதில் அளித்திருந்தார். அந்தப் பதிலில் திருப்தி அடையாத லோக்சபா தலைமைச் செயலகம், 'அவசரப்பட்டு, பதவியை பறித்த பிறகு, தண்டனை விதிக்கப்பட்டவர்கள், மேல் முறையீடு செய்து, தண்டனையிலிருந்து விலக்கு பெற்றால் என்ன செய்வது?' என, கேள்வி எழுப்பி, மீண்டும், வாகன்வதியிடம் கருத்து கேட்டது.அதற்கு பதிலளித்து, வாகன்வதி சமீபத்தில் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: கிரிமினல் மக்கள் பிரதிநிதிகளுக்கு, இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டதும், அந்த நாளிலேயே அவர்கள், பதவிகளை இழக்கின்றனர். அவர்கள் பதவியை உடனடியாக பறித்து, அதற்கான அறிவிப்பை, லோக்சபா தலைமை செயலகம், உடனடியாக ?வளியிட வேண்டும்.
இது தான், ஜூலை, 10ம் தேதி, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின் சாராம்சம். அதில், மேல் முறையீடு பற்றி எந்தத் தகவலும் குறிப்பிடப்படவில்லை. எனவே, அது பற்றி இப்போது யோசிக்கத் தேவையில்லை. அப்படியொரு நிலைமை வரும் போது பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment