Sunday, 13 October 2013

அயோத்தி கோவிலை மீண்டும் கட்ட அழைப்பு விடுத்த அதிகாரி இடமாற்றம்

லக்னோ:உத்தர பிரதேசத்தில், "அயோத்தி கோவிலை, மீண்டும் உருவாக்குது தொடர்பான கூட்டம்' என்ற பெயரில், அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு, தவறுதலாக அழைப்பு விடுத்த, மூத்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.

அயோத்தி கோவில், உத்தர பிரதேச மாநிலத்தின் சர்ச்சைக்குரிய அம்சமாக உள்ளது. "அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவது' என, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் உறுதியாக உள்ளனர். அதை தடை செய்யும், அனைத்து விதமான நடவடிக்கைகளையும், மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்கின்றன.உ.பி.,யை ஆளும், முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி அரசு, "ராமர் கோவிலை கட்ட விட மாட்டோம்' என்பதில் உறுதியாக உள்ளது.

இந்நிலையில், அனைத்து மாநில, டி.ஜி.பி., மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, உள்துறை முதன்மை செயலர், சர்வேஷ் சந்திர மிஸ்ரா, சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

அதில், இம்மாதம், 18ம் தேதி, "அயோத்தி கோவிலை, மீண்டும் உருவாக்குது தொடர்பான கூட்டம்' லக்னோவில் நடக்க உள்ளது. அதில், அதிகாரிகள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.அதைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயம், முதல்வர், அகிலேஷûக்கும் தெரிய வந்தது. அதற்குப் பிறகு விசாரணை மேற்கொண்டதில், கடிதத்தின் தலைப்பில் தவறு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.

அதாவது, "அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக, மத்திய அரசின் சட்டம்' என இருப்பதற்கு பதிலாக, அயோத்தி ராமர் கோவிலை மறுபடியும் கட்டுவதற்கான ஆலோசனை கூட்டம் என தவறுதலாக, கடிதம் அச்சடிக்கப்பட்டு விட்டது. இதை அறிந்ததும், சம்பந்தப்பட்ட அதிகாரி மிஸ்ரா, வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார். எனினும், முக்கிய விவகாரத்தில் அசட்டையாக இருந்த அவரை, இடமாற்றம் செய்து, தலைமை செயலர், ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment