புதுடில்லி:'குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை பரிசீலனை செய்யும்போது, கருணை என்ற பெயரில், தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிட கூடாது' என, கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியது.
மேகாலாயா மாநிலத்தின், துரா என்ற இடத்தில், கேந்திரியா வித்யாலயா பள்ளியில், பணியாற்றிய கிளார்க் ஒருவர், மது குடித்து பணிக்கு வந்தார்.அதோடு, பள்ளி முதல்வர் அறைக்கு சென்று, தகாத முறையில் நடந்துள்ளார். ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி, அவரை பணியில் இருந்து நீக்க, கல்வித்துறை உத்தரவிட்டது. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் இந்த உத்தரவு சரியானது என தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, அவர் மேகாலயா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில், அவர், "மார்க்கெட்டிற்கு சென்ற போது, நண்பர்கள் தவறாக கொடுத்த மதுபானத்தை வாங்கி குடித்தேன். கொஞ்ச நேரத்தில் தலைசுற்றவே வீட்டுக்கு புறப்பட்டேன். அப்போது, பள்ளியில் மறந்து வைத்துவிட்டு வந்த பொருளை எடுப்பதற்காக சென்றேன். பணிக்கு செல்லவில்லை' என குறிப்பிட்டு இருந்தார்.
இதை விசாரித்த ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில், "மனுதாரர் குடிபழக்கத்திற்கு அடிமையானவர் அல்ல. அடிக்கடி குடித்து விட்டு வருபவரும் அல்ல. அன்று ஒரு நாள் தவறாக அவரையும் அறியாமல் நடந்துள்ளது. இதற்காக, பணியில் இருந்து நீக்குவது பொருத்தமற்றது. அவர் தவறாக நடந்து கொண்டதற்கான சூழ்நிலையை அறிந்து கருணை காட்டலாம். எனவே அவரை பணியில் சேர்க்க வேண்டும்' என, குறிப்பிட்டு இருந்தது.
இதை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இம் மனு, நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்யாயா மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பரிசீலனை செய்யும்போது, கோர்ட்டுகள் கருணை காட்டுவதாக கூறி, தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்த கூடாது. பள்ளிக்கூடம் என்பது கோவில் போன்று புனிதமானது. அங்கு பணியாற்றும் நபர், குடித்து விட்டு பணிக்கு வருவதை ஏற்க முடியாது. இதில், பள்ளி நிர்வாகம், மத்திய நிர்வாகம் தீர்ப்பாயம் எடுத்த முடிவு சரிதான். இந்த உத்தரவை ரத்து செய்துள்ள, மேகாலயா ஐகோர்ட் முடிவை ஏற்க முடியாது.அதை ரத்து செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்
No comments:
Post a Comment