Saturday, 19 October 2013

ஜாட்' இன சிறுமியருக்கு ஆடை கட்டுப்பாடு:


ரோடக்: 'அரியானாவில், பள்ளி, கல்லூரி செல்லும், 'ஜாட்' இன சிறுமியர், பெண்கள், 'தொளதொள' சல்வார் கம்மீஸ் உடை தான் அணிய வேண்டும்; ஆண்கள் மற்றும் சக மாணவர்களுடன் பேசக் கூடாது' என, 'காப்' எனப்படும், ஜாதி பஞ்சாயத்தினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
அரியானா மாநிலத்தில் வாழும், ஜாட் சமுதாய மக்கள், தங்கள் இனத்தை சேர்ந்த பெண்கள், பிற ஜாதியை சேர்ந்தவர்களை காதலிக்க, கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒரே ஜாதியாக இருந்த போதிலும், ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள், காதலிப்பதோ அல்லது திருமணம் செய்வதோ தவறு என்ற நடைமுறையைக் கடைபிடிக்கின்றனர். ஒரே கோத்திரத்தை சேர்ந்த காதல் ஜோடியை, கடந்த செப்டம்பர் மாதம், கொடூரமாக கொன்றதை அடுத்து, அந்த இன, ஜாதி பஞ்சாயத்தின் முகம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், பள்ளி செல்லும் சிறுமியர், 10 வயதை தாண்டியிருந்தால், கட்டாயம் சல்வார் கம்மீஸ் உடை தான் அணிய வேண்டும்; ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்றவற்றை அணியக் கூடாது.
ஆண்கள் மற்றும் மாணவர்களுடன் பேசக் கூடாது. மாணவர்களும், மாணவியரும், வேறு வேறு பஸ்களில் தான் பயணம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அந்தக் கட்டுப்பாடுகளை, சிறுமியர் மற்றும் மாணவியர் பின்பற்றுகின்றனரா என கண்காணிக்க, பஸ் ஸ்டாண்ட் மற்றும் பள்ளி, கல்லூரி வாசல்களில், காப் பஞ்சாயத்து உளவாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ''இந்த நடவடிக்கைகள் அவசியம்; எங்கள் இன பெருமையைக் காப்பாற்ற, இத்தகைய நடவடிக்கையை பின்பற்றுகிறோம்,'' என, காப் பஞ்சாயத்து துணைத் தலைவர், ராஜேந்தர் சிங் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment