ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் ஜெர்மன் கத்தோலிக்க பிஷப் ஃபிரான்ஸ்- பீட்டர் டெபார்ட்ஸ்- வான் எல்ட்ஸ், வாடிகனுக்குச் சென்று போப் பிரான்சிஸைச் சந்தித்து விளக்கமளித்தார்.
ஜெர்மன் பிராங்பர்ட் அருகேயுள்ள லிம்பர்க் பகுதியின் பிஷப்பாக இருப்பவர் ஃபிரான்ஸ்- பீட்டர் டெபார்ட்ஸ்- வான் எல்ட்ஸ்(53). இவர் மிக ஆடம்பரச் செலவுகளை மேற்கொள்வதாகப் புகார் எழுந்தது.
இவர் லிம்பர்க் பகுதியிலுள்ள பிஷப்பின் வசிப்பிடம் மற்றும் அலுவலகத்தைப் புனரமைக்க 4.2 கோடி அமெரிக்க டாலர்களைச் (சுமார் ரூ. 259 கோடி) செலவிட்டதாகக் கூறப்படுகிறது. அக்கட்டடங்க ளின் உண்மையான மதிப்பு 72 லட்சம் அமெரிக்க டாலர்களாகும் (சுமார் ரூ. 4.44 கோடி). உண்மையான மதிப்பை விட சுமார் ஆறு மடங்கு தொகை செலவிட்டு அந்த வீட்டை மிக சொகுசானதாக அவர் மாற்றியுள்ளார்.
இவ்வீட்டைப் புனரமைப்பதற்காக அவர் செலவிட்ட தொகை சுமார் ரூ. 320.7 கோடி இருக்கும் என வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவர் கடந்த ஆண்டு இந்தியா வந்தபோது, முதல் தர சொகுசு வகுப்பில் விமானப் பயணம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவர் இந்தியா வந்தது ஏழைகளைச் சந்திப்பதற்காக என பிஷப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனது விமானப் பயணம் குறித்து தவறான தகவலை ஹம்பர்க் நீதிமன்றத்தில் தெரிவித்தது தொடர்பாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இதனிடையே ரோமில் நடை பெற்ற பிஷப்களின் மாநாட்டில் பங்கேற்க ஃபிரான்ஸ்- பீட்டர் டெபார்ட்ஸ்- வான் எல்ட்ஸ் எட்டு தினங்களுக்கு முன்பே, இத்தாலிக்குச் சென்று விட்டார். அங்கு வாடிகனில் போப்பைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தார்.
பிஷப் ஃபிரான்ஸ்- பீட்டர் டெபார்ட்ஸ்- வான் எல்ட்ஸ் பதவி விலகும்படி குறிப்பிட்ட அளவு போராட்டக்காரர்கள் தினமும் அவர் தங்கியிருந்த இடத்துக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், ஃபிரான்ஸ்- பீட்டர் டெபார்ட்ஸ்- வான் எல்ட்ஸ், போப் பிரான்ஸிஸைச் சந்தித்தார். அப்போது, தன் ஆடம்பர வாழ்க்கை மற்றும் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் விளக்கமளித்ததாகத் தெரிகிறது. வாடிகன் தரப்பில் இந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்படவில்லை.
பிஷப்புகள் ஏழை மக்களோடு மக்களாக அடித்தள வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் போப் பிரான்ஸிஸின் கோட்பாடாகும். அதற்கு மாறாக அதி சொகுசு வாழ்க்கையை ஃபிரான்ஸ்- பீட்டர் டெபார்ட்ஸ்- வான் எல்ட்ஸ் வாழ்ந்துள்ளார். பிஷப் ஃபிரான்ஸ்- பீட்டர் டெபார்ட்ஸ்- வான் எல்ட்ஸை பதவியில் நீட்டிப்பதா, அல்லது நீக்குவதா என்பது குறித்து ஜெர்மன் கத்தோலிக்க பிஷப்புகள் மாநாட்டின் முடிவுக்காக போப் காத்திருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment