சூரு (ராஜஸ்தான்): ''என் பாட்டி, தந்தை கொலை செய்யப்பட்டது போல், நானும் கொல்லப்படலாம்; அதற்காக கவலைப்பட மாட்டேன்; மதவாத சக்திகளை தொடர்ந்து விமர்சிப்பேன்,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல், உணர்ச்சிகரமாக பேசினார்.
அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார். காங்., சார்பில், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
திடீர் மாற்றம்:ஏற்கனவே, பிரசாரத்தை துவக்கிவிட்ட நரேந்திர மோடிக்கு, செல்லுமிடமெல்லாம் ஏராளமான கூட்டம் கூடுகிறது. இதையடுத்து, ராகுலும் அதிரடியாக பேசத் துவங்கியுள்ளார்.இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில், ராகுல் நேற்று பங்கேற்றார்.
சூரு என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில், ராகுல் பேசியதாவது:பா.ஜ., மதவாத அரசியல் நடத்துகிறது. முசாபர் நகர் போன்ற இடங்களில் கலவரம் நடந்த பகுதிகளுக்கு சென்றபோது, மதவாத அரசியலால் மக்கள், எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை, வெளிப்படையாக பார்க்க முடிந்தது.இதே போன்ற பாதிப்பு, எனக்கும் ஏற்பட்டுள்ளதை உணர்ந்தேன்.
வெறுப்புணர்வு காரணாக, என் பாட்டி இந்திராவும், தந்தை ராஜிவும் கொல்லப்பட்டனர். அவர்களைப் போல், நானும் கொல்லப்படலாம்; அதற்காக, நான் கவலைப்பட மாட்டேன்; மதவாத சக்திகளுக்கு எதிராக, தொடர்ந்து குரல் கொடுப்பேன்.கடந்த, 1984ல், என் பாட்டி, அவரின் பாதுகாவலர்களான, பியாந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோரால் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தை தற்போது நினைவுபடுத்தி பார்க்கிறேன். அப்போது, எனக்கு, 14 வயது.என் பாட்டி சுட்டுக் கொல்லப்பட்டதாக, எங்கள் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். இதைக் கேட்டதும், என் கால்கள் நடுங்கின. நானும், பிரியங்காவும், வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு, என் பாட்டியின் ரத்த துளிகள், சிதறிக் கிடந்தன.
விளையாட்டில் உதவி:பியாந்த் சிங்கும், சத்வந்த் சிங்கும், எங்கள் வீட்டுத் தோட்டத்தில், எனக்கு, பேட்மிண்டன் விளையாட கற்றுத் தந்தவர்கள்; எனக்கு நண்பர்களாகவும் இருந்தனர். அப்போது அவர்கள், 'பாட்டி, எங்கே தூங்குவார், அவருக்கு போதிய பாதுகாப்பு உள்ளதா' என, கேட்டனர்.நம் மீது, கையெறி குண்டுகள் வீசப்பட்டால், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, எப்படி தரையில் படுக்க வேண்டும் என்பதையும், எனக்கு கற்றுத் தந்தனர். ஆனால், அப்போது, அவர்களின் நோக்கம் என்ன என்பது, எனக்கு தெரியவில்லை.தீபாவளியின் போது, அவர்கள் தாக்குதல் நடத்தப் போகின்றனர் என்ற விவரம், எனக்கு அப்போது தெரியவில்லை.இவ்வாறு, ராகுல் பேசினார்.
No comments:
Post a Comment