சீனாவில், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. எனவே, அனைவரும் ஆண் குழந்தைகளை பெறவே விரும்புகின்றனர்.
இதனால், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துவிட்டது. ஆகவே, திருமணத்துக்கு பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினை ஒருபுறம் இருக்க பல சிரமங்களுக்கு இடையே நடைபெறும் திருமணங்களும் விவாகரத்தில் முடிகிறது.
சமீப காலமாக விவாகரத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம் வரை மட்டும் 40 ஆயிரம் தம்பதிகள் தங்கள் திருமண பந்தத்தை முறித்துள்ளனர்.
ஷாங்காய் நகரிலும் இதே நிலைதான் உள்ளது. இதற்கு அங்கு விதிக்கப்பட்டுள்ள அதிக அளவிலான சொத்து வரி தான் காரணம் என கூறப்படுகிறது.
வீடு மற்றும் குடியிருப்புகளை விற்பவர்கள் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 20 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. அதே நேரத்தில் விவாகரத்து செய்யும் தம்பதிகளுக்கு இந்த வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்கும் போது அரசுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. சட்டத்தின் இந்த ஓட்டையை பயன்படுத்தி கொள்ள விவகாரத்து என்ற புதிய உத்தியை சீன தம்பதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு விவகாரத்து செய்து கொள்பவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். இக்காரணத்தால் தான் சீனாவில் கடந்த 4 ஆண்டுகளை விட தற்போது விவகாரத்து அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment