Monday, 14 October 2013

பழங்குடியின பெண்ணுக்கு மொட்டையடித்து சித்ரவதை



மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய வேறு சமூகத்தைச் சேர்ந்த யோகேஷ் பட்டீல் என்ற வாலிபரை காதலித்துள்ளார். இந்த காதலுக்கு யோகேஷ் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்பை மீறி கடந்த மே மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அந்த பெண் பிவண்டி தாலுகா பாலி கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு காதல் கணவனை அழைத்துச் சென்று வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி இருவரும் யோகேஷ் பட்டீலின் வீட்டிற்கு வந்தனர். அப்போது யோகேஷ் பட்டீலின் குடும்பத்தினர் அவர்கள் இருவரையும் கட்டி வைத்து அடித்துள்ளனர். அத்துடன் யோகேஷின் மனைவியின் தலையை மொட்டையடித்து அவமானப்படுத்தியுள்ளனர். இதனை செல்போனில் போட்டோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பின்னர் அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் வந்து தலையிட்டு, கணவன்-மனைவி இருவரையும் மீட்டு பத்கா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் இருவரும் தனியாக வாழ வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்பின்னர் உள்ளூர் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் நேற்று இரவு அந்தப்பெண், யோகேஷ் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பெண்ணின் மாமியாரை கைது செய்துள்ளனர். மைத்துனரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment