Sunday, 27 October 2013

இருமல் மருந்து குடித்திருந்தாலும் விமானம் ஓட்ட முடியாது விமானிகளுக்கு கெடுபிடி உத்தரவுகள்


இருமல் மருந்து, மவுத் வாஷ் திரவங்களை பயன்படுத்தியிருந்தாலும், அது மதுபானமாகவே கருதப்பட்டு, பயன்படுத்திய விமானி, விமானம் ஓட்டும் பணியிலிருந்து இறக்கி விடப்படுவார் என, விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம், கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

விமானங்களை இயக்கும், விமானிகள் மற்றும் விமானி அறை ஊழியர்கள், மதுபானம் அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபானம் அருந்தியது தெரிய வந்தால், பணியிலிருந்து, மூன்று மாதங்களுக்கு விலக்கப்படுவர்.இரண்டாவது முறையாக, அதே தவறை திரும்பச் செய்திருந்தால், ஐந்தாண்டுகள், விமானம் ஓட்ட தடை விதிக்கப்படும்.மதுபானம் அருந்தி உள்ளனரா என்பதை, பிரத் அனலைசர் கருவி மூலம், டாக்டர்கள் சோதிக்கின்றனர். அந்தச் சோதனையில், மது அருந்தியது உறுதியானால், விமானி மற்றும் விமானி அறை ஊழியர்களுக்கு, தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்த விதிமுறைகளில், மேலும் சில, கெடுபிடிகளை விமான போக்குவரத்துத் துறை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பற்களைசுத்தமாக வைத்துக் கொள்வதற்கான, 'மவுத் வாஷ்' திரவங்கள், இருமல் மருந்து போன்றவற்றையும், விமானிகள் பயன்படுத்தியிருக்கக் கூடாது; அவ்வாறு செய்தால், அதுவும் மதுபானமாக கருதப்படும் என அறிவித்துள்ளது.மேலும், உடல் நலக்குறைபாடு உள்ள விமானிகள், விமான நிறுவன மருத்துவர்களிடம் மட்டுமே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், சில தண்டனை தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மது அருந்திய படி, விமானம் ஓட்ட வந்து, பிரத் அனலைசர் கருவியில், இரண்டாவது முறை சிக்கும் விமானி, ஐந்தாண்டுகளுக்கு பதிலாக, இரண்டாண்டுகள் விமானம் ஓட்ட தடை விதிக்கப்படும்; மூன்றாவது முறை, அதே தவறை செய்தால் தான், ஐந்தாண்டுகள் வரை தடை விதிக்கப்படும்.சில நாட்களுக்கு முன் வரை, இரண்டாவது முறை சிக்கினால், ஐந்தாண்டு தடையாக இருந்தது; இப்போது, இரண்டாண்டு தடையாக குறைக்கப்பட்டுள்ளது.பிற நாடுகளைச் சேர்ந்த விமானிகளுக்கும், இதே உத்தரவு பொருந்தும் என, விமான போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.

No comments:

Post a Comment