மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கொத்தனார் நாகலிங்கம்,27. இவரது மனைவி சத்யா,24. ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சத்யாவுக்கும், அதேபகுதியைச் சேர்ந்த ஈயம் பட்டறை தொழில் செய்யும் முகமதுஉசேனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இவர் மீது, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. ஓராண்டுக்கு முன், கடன் மற்றும் வறுமை காரணமாக மனைவி, குழந்தைகளை முகமதுஉசேனே பராமரிக்க நாகலிங்கம் ஒப்புக்கொண்டார். இதற்கு ஈடாக ரூ.1.50 லட்சம் பெற்றார். இதை அறிந்த சத்யாவின் பெற்றோர், நாகலிங்கத்தை வீட்டைவிட்டு வெளியேற்றினர். இதைதொடர்ந்து, கோவையில் நாகலிங்கம் வேலை செய்தார். நவ.,1ல், மனைவி, குழந்தைகளை தேடி வந்து, "குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடலாம்' என்று அழைத்தார். இதை ஏற்க மறுத்த மனைவி, "விலைக்கு விற்றுவிட்டு, இப்போது அழைக்கிறீர்களே' என வரமறுத்து விட்டார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, மகன் சபரியை,4, அழைத்துச் செல்ல நாகலிங்கம் முயன்றார். இதை கவனித்த சத்யா உறவினர் சாத்தையா, சத்தம்போட்டு, சபரியை மீட்டு சத்யாவிடம் ஒப்படைத்தார். பின், நெல்லை மாவட்டம் புளியங்குடியில் இருந்த முகமதுஉசேனுக்கு தகவல் தெரிவித்தார். "இப்படியே விட்டால் மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்து, சத்யாவை அழைத்துச் சென்றுவிடுவார்' என முகமதுஉசேன் பயந்தார். அவரை கொலை செய்ய திட்டமிட்டு, சாத்தையாவை அணுகினார். அவர் கொடுத்த தகவல்படி, நேற்றுமுன்தினம் இரவு அரசு பாலிடெக்னிக் கல்லூரி பாலத்திற்கு கீழ், போதையில் வந்து கொண்டிருந்த நாகலிங்கத்தை கத்தியால் நெஞ்சில் குத்தியும், கழுத்தை அறுத்தும் முகமதுஉசேன் மற்றும் நண்பர் முகைதீன் கொலை செய்தனர். இவ்வழக்கில், சாத்தையாவும், முகமதுஉசேனும் கைது செய்யப்பட்டனர். முகைதீனையும், கேரளாவைச் சேர்ந்த தன்சீரையும் ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் தேடி வருகிறார்
No comments:
Post a Comment