Friday, 15 November 2013

விசாரணை என்ற பெயரில் புகாரை நிலுவையில் வைக்கக்கூடாது : இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுறுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு



சென்னை: விசாரணை என்கிற போர்வையில், புகாரை, நிலுவையில் வைக்கக் கூடாது; கடும் குற்றத்தை வெளிப்படுத்தும் புகாராக இருந்தால், உடனடியாக அதை பதிவு செய்ய வேண்டும் என, அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், டி.ஜி.பி., அறிவுறுத்த வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, போலீஸ் கமிஷனரிடம், 2009, ஆகஸ்ட்டில், ரிக்கப்சந்த் என்பவர் அளித்த புகாரில், "திருட்டு நகையை பறிமுதல் செய்ய வந்ததாக கூறி, மயிலாப்பூர், போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த, கான்ஸ்டபிள் சம்பத் என்பவர், என் அடகு கடையில் இருந்த, 203 கிராம், தங்க நகைகளை எடுத்துச் சென்றார். இந்த நகைகளை, கோர்ட்டில் ஒப்படைக்கவில்லை; போலீஸ் நிலையம் வசமும் இல்லை. நகைகள் எங்கே உள்ளன என, தெரியவில்லை' என, கூறப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லாததால், உயர்நீதிமன்றத்தில், ரிக்கப்சந்த், மனுத் தாக்கல் செய்தார். இரண்டு வாரங்களில், புகாரை பதிவு செய்யும்படி, மயிலாப்பூர் இன்ஸ்பெக்டருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு, மார்ச்சில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
இதையடுத்து, "உத்தரவு பின்பற்றப்படவில்லை' எனக்கூறி, இன்ஸ்பெக்டர் கருணாகரனுக்கு எதிராக, கோர்ட் அவமதிப்பு மனுவை, ரிக்கப்சந்த் தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி மதிவாணன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜெகதீஷ்சந்திரா, போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகினர்.

நடைமுறை என்ன ஆனது ? : நீதிபதி மதிவாணன் பிறப்பித்த உத்தரவு: கடந்த ஆண்டு, டிசம்பர், 20ம் தேதி, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புலன் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. விசாரணைக்காக, மனுதாரரை அழைக்கவில்லை. "அங்கு பணியாற்றிய அதிகாரி மன்னர்மன்னன், புகாரை, தவறுதலாக எங்கேயோ வைத்து விட்டதால், உடனடியாக வழக்குப் பதிவு செய்ய முடியவில்லை; பின், புதிதாக புகார் பெற்று, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனால், கால தாமதம் ஏற்பட்டது' என, இன்ஸ்பெக்டர் தரப்பில், கூறப்பட்டது. இன்ஸ்பெக்டர் சார்பில் ஆஜரான, அரசு குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம், "சில குறைபாடுகள் இருந்தாலும், வேண்டுமென்றே இன்ஸ்பெக்டர் செயல்படவில்லை. அவர், ஓய்வு பெறும் நிலையில் உள்ளார். எனவே, அவரை எச்சரித்து, விட்டு விடலாம்' என்றார். தற்போது, இந்த வழக்கு, சைதாப்பேட்டை கோர்ட்டில், நிலுவையில் உள்ளது. மயிலாப்பூர், போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டராக இருந்த, மன்னர்மன்னன், தலைமை கான்ஸ்டபிளாக இருந்த, சம்பத் ஆகியோர் மீது, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு போலீஸ் நிலைய விதிகளில் கூறப்பட்டுள்ள நடைமுறையை, இன்ஸ்பெக்டர் கருணாகரன் பின்பற்றவில்லை என்பதை, இந்த கோர்ட், கனத்த இதயத்துடன் பதிவு செய்கிறது.
கோர்ட் அவமதிப்பு சட்டத்தின்படி, இன்ஸ்பெக்டர் கருணாகரன், குற்றம் புரிந்துள்ளார். இருந்தாலும், அரசு குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் கேட்டு கொண்டபடி, "எதிர்காலத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்' என, இன்ஸ்பெக்டர் கருணாகரனை எச்சரிக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள், கோர்ட்டை அணுகும்போதாவது, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி, உடனே விழிப்படைந்து, சட்டப்படி கடமை ஆற்ற வேண்டும். அதன்பின்னும், கடமையை அதிகாரிகள் செய்யவில்லை என்றால், அதை சகித்துக் கொள்ள முடியாது. கோர்ட் அவமதிப்பு மனுக்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 
எனவே, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்து, அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், உத்தரவுகளை வழங்க வேண்டியது அவசியம் என, இந்த கோர்ட் கருதுகிறது. புகாரில், கடுமையான குற்றம் இருப்பது தெரிந்தால், உடனடியாக அந்தப் புகாரை, பதிவு செய்யும்படி, அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், டி.ஜி.பி., உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், "விசாரணை என்கிற போர்வையில், புகாரை நிலுவையில் வைக்கக் கூடாது' எனவும், அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, நீதிபதி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment