Tuesday, 12 November 2013

ஒருவரின் 'போதை'யால் தவிக்கும் மூன்று குடும்பங்கள்


குடித்துவிட்டு, பொறுப்பில்லாமல், பந்தையத்திற்காக கார் ஓட்டி, தீபாவளி அன்று, சென்னை மெரீனா கடற்கரைசாலையில், பயங்கர விபத்தைஏற்படுத்தியவர் அன்பு சூர்யா, 21.இவருடைய இந்த செயலால் போலீஸ்காரர் சேகர், மீன் வியாபாரி திலகவதி, 33, மீனவர் அர்ஜுனன், 19, ஆகியோரின் உயிர்கள் மாய்ந்தன. தாளமுடியாத சோகத்தில் ஆழ்ந்திருக்கும் இவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. 
விபத்தில் பலியான திலகவதியின் குடும்பத்தில், கணவர் சிவக்குமார், தாய் கிருஷ்ணவேணி, பிள்ளைகள் சினேகா, 15, விஷ்வா, 13, ஆகியோர் உள்ளனர். இவர்கள், மயிலாப்பூர் சுனாமிகுடியிருப்பில் வசித்து வருகின்றனர்.திலகவதியின் மறைவு குறித்து, சிவக்குமார் கூறியதாவது:கடந்த பிப்ரவரி மாதம், மீன் பிடித்து, கரைக்கு வந்த போது, நான் வந்த படகு கவிழ்ந்தது. இதில், முதுகெலும்பு உடைந்தது. சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். மூன்று மாதத்திற்கு மேல், மருத்துவமனையில் தங்க வேண்டி இருந்தது. அதன் பின், 'அதிக பளுவை தூக்கக் கூடாது' என,மருத்துவர்கள் கூறிவிட்டனர்.இதனால், குடும்ப பாரத்தை திலகவதி தான் சுமந்தார். வட்டிக்கு பணம் வாங்கிய திலகவதி, காசி மேட்டில் இருந்து மீன் வாங்கி வந்து, அதை விற்று, குடும்பத்தை கவனித்தார். சம்பவதன்றும் காசிமேட்டிற்கு மீன் வாங்க சென்ற போது தான், விபத்து ஏற்பட்டது.திலகவதி இறப்பிற்குப் பின், பிள்ளைகளை சரியாக கவனிக்க முடியவில்லை. உணவு சமைக்க முடியாததால், அருகில் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார திருவல்லிக்கேணி, அயோத்தியா நகரை சேர்ந்தவர் ஏளாய். 12 ஆண்டுகளுக்கு முன் தன் கணவர் ராமதாசை இழந்து, தற்போது, மகன் அர்ஜுனனையும் இழந்து உள்ளார். மகள்கள் நந்தினி, 17, சவுமியா, 13, ஆகியோருடன் வசித்து வருகிறார்.கண்களில் கண்ணீரோடு அவர்கூறியதாவது:மீன் விற்று, குடும்பத்தை நடத்தி வருகிறேன். மகன் அர்ஜுனன், மீன்பிடி தொழில் செய்து வந்தான். மகள்கள் பள்ளியில் படிக்கின்றனர்.கடந்த, 1ம் தேதி இரவு, அர்ஜுனன், நண்பர்களுடன், வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது, சிலர் தகராறு செய்துள்ளனர். தகவல் கிடைத்து, மெரீனா போலீசார் வந்தனர்.போலீஸ் வருவதை பார்த்து, அங்கு இருந்தவர்கள் பயந்து ஓடினர்.அப்போது தகராறில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டும்படி, அங்கிருந்த என் மகனை போலீசார் பிடித்துச் சென்றனர்.நானும், என் அக்கா அஞ்சலையும், போலீஸ் நிலையம் சென்று, எந்த தகராறும் செய்யாத என் மகனை விடுவிக்குமாறு கேட்டோம்.'இரவு ரோந்துக்கு சென்றுள்ள அதிகாரி கள் வந்தவுடன், அழைத்து செல்லுங்கள்' என, போலீசார் கூறிவிட்டனர்.நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். என் அக்கா அஞ்சலை, போலீஸ் நிலையத்திலேயே காத்திருந்தார். மறுநாள் காலை, 3:30 மணிக்கு, போலீஸ் நிலையத்தில், கையெழுத்து போட்டு கொடுத்துட்டு, அர்ஜுனனை அழைத்து வந்தார்.அங்கு, சாலையை கடக்க நின்றிருந்த போது, வேகமாக வந்த கார் மோதி, பெரியம்மாவின் கண் முன்பே, அர்ஜுனன் இறந்தான். போலீசார், அர்ஜுனனை அழைத்துச் செல்லாமல் இருந்திருந்தால், விபத்தில் சிக்கி இருக்கமாட்டான்.கணவரும் இல்லாமல், இருந்தமகனையும் இழந்து, இரண்டு பெண் பிள்ளைகளை வைத்து கொண்டு, வாழ வழி தெரியாமல், மிகவும் தவித்து வருகிறேன்.இவ்வாறு ஏளாய் கண்ணீர் மல்க கூறினார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருமணம் முடிந்த நிலையில், போலீஸ்காரர் சேகரின் மனைவி, வடிவுக்கரசி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். சென்னை, நரியங்காடு காவலர் குடியிருப்பின், மூன்றாம் தளத்தில், இருவரும் வசித்து வந்தனர்.வடிவுக்கரசியை, கவனிக்க ஆள் இல்லாததால், தஞ்சை மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு, சமீபத்தில், சேகர் அனுப்பிவைத்தார்.இந்த நிலையில், சம்பவத்தன்று, இரவு ரோந்துப் பணியில் இருந்த போது, விபத்து ஏற்படுத்திய காரை தடுக்கச் செல்ல, அவர் மீதும் கார் மோதி,பரிதாபமாக உயிரிழந்தார் சேகர்.
இது குறித்து, சேகரின் அண்ணன் குமார் கூறியதாவது:என் தம்பி சேகர் கார் விபத்தில் இறந்த செய்தி, அன்று காலை, 7:00 மணிக்கு கிடைத்தது. உடனே நாங்கள் அனைவரும், பிற்பகல் சென்னை வந்தோம்.கார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று, அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தோம். அப்போது, வேகமாக வந்த கார் மோதியதில், இரண்டு பேர் இறந்ததாகவும், என் தம்பி, அந்த காரை மடக்கியபோது, அதே காரில் சிக்கி, அவரும் பலியானது தெரிந்தது.சிறு வயதில், மது போதைக்கு அடிமையாகி, சொகுசு காரை ஓட்டிச் சென்று விபத்துகளை ஏற்படுத்தும் இளைஞர்களை என்னவென்று சொல்ல.மதுவினால் இந்த சமுதாயம் சீரழிந்து வருகிறது. சேகர் அணிந்திருந்த தங்க மோதிரம், மணிபர்ஸ், 5,000 ரூபாய், ஆகியவை விபத்து நடந்த இடத்தில் இருந்து காணாமல் போனது, மிகவும் வேதனை அளிக்கிறது.எனினும், சேகரின் உடல் அடக்கம், சொந்த ஊரில், துப்பாக்கி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் நடந்ததை கண்டு, என் தம்பி வீர மரணத்தை தழுவி உள்ளான் என, பெருமிதம் கொண்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.சேகரின் மனைவி வடிவுக்கரசியின் அண்ணன் வடிவேல் கூறியதாவது:நாங்கள் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம். சமீபத்தில் தான், நிறைமாத கர்ப்பிணியான என் தங்கை வடிவுக்கரசி, ஊருக்கு வந்தார். சேகர் விபத்தில் இறந்ததால், இனிமேல், வாழ்நாள்முழுவதும் எங்களுடன் தான் இருப்பார்.'பூ, பொட்டு' இல்லாமல், என்தங்கையை பார்ப்பது கடினமாக இருக்கிறது. சிறுவயதில், கணவனை இழந்து, என்தங்கை மிகவும் துன்பப்படுவது, வீட்டில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவருக்கு ஆறுதல் கூற வழி தெரியவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.இப்படி, மூன்று குடும்பங்களையும் தீராத் துயரில் ஆழ்த்திய, இது போன்ற விபத்துக்கள் இனி நேராமல் இருக்க, சட்ட விதிகளை மேலும் கடுமையாக்குவதுடன், விபத்து ஏற்படுத்தியவர்களுக்கு கடுமையான தண்டனையையும், வழங்க வேண்டும். ஒருவருக்கு அளிக்கும் தண்டனை மற்றவர்கள் திருந்த வழிவகுக்கும்.

No comments:

Post a Comment