புதுடில்லி: பகுஜன் சமாஜ் கட்சி, எம்.பி.,யின் வீட்டில் வேலை பார்த்த பெண், பலத்த காயங்களுடன், மர்மமான முறையில் இறந்து கிடந்ததால், எம்.பி.,யின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
மாயாவதியின், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர், தனஞ்சய் சிங். இவர், உ.பி., மாநிலம், ஜான்பூர் லோக்சபா தொகுதி, எம்.பி.,யாக உள்ளார். இவரின் வீடு, டில்லியில் உள்ளது. இவரின் வீட்டில், வேலை செய்து வந்த பெண், மர்மமான முறையில், நேற்று இறந்து கிடந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த போலீசார், எம்.பி.,யின், வீட்டுக்கு வந்து, பெண்ணின் உடலை கைப்பற்றினர். அந்த பெண்ணின் உடலில், கால், மார்பு, தோள்பட்டை உள்ளிட்ட பல இடங்களில், பலத்த காயங்கள் இருந்தன. முதல் கட்ட விசாரணையில், தனஞ்சய் சிங்கின் மனைவி, ஜாக்ருதி, அந்த பெண்ணை, அடித்து காயப்படுத்தியது தெரிய வந்தது. இதை அடுத்து, அவரை, போலீசார் கைது செய்தனர். ஆனாலும், 'பிரேத பரிசோதனைக்கு பின் தான், அந்த பெண், இறந்ததற்கான காரணம் தெரிய வரும்' என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வேலை பார்க்கும் மற்றவர்களிடமும், போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த, 10 மாதங்களாக, அந்த பெண், தனஞ்சய் வீட்டில் வேலை பார்த்தது தெரிய வந்தது. தனஞ்சய் இதுகுறித்து கூறுகையில், ''நேற்று இரவு, ஜாக்ருதியிடமிருந்து, எனக்கு போன் வந்தது. அப்போது, வீட்டில் வேலை பார்க்கும் பெண், கீழே விழுந்து, காயமடைந்துள்ளதாக கூறினார். ஆனால், அந்த பெண் இறந்து விட்டது, இப்போது தான் தெரியும். போலீசார் தான், இந்த தகவலை என்னிடம் தெரிவித்தார்,'' என்றார். தனஞ்செய் சிங்கும், ஜாக்ருதியும், ஏழு மாதங்களுக்கு முன், விவகாரத்துக்காக விண்ணப்பித்துள்ள தகவலும், தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment