புதுடில்லி: டில்லி மெட்ரோ ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்களில் பதிவான இளம் ஜோடிகளின் ஆபாச வீடியோ காட்சிகள், மெட்ரோ ரயில் ஊழியர்களாலேயே, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
டில்லி மெட்ரோ ரயில்களில், திருட்டு மற்றும் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும், பாலியல் வன்முறைகளை தடுக்கவும், அவற்றை கண்காணித்து, குற்றவாளிகளை பிடிக்கவும், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஜூலை மாதம், மெட்ரோ ரயில்களில் பயணித்த இளம் ஜோடிகள் அத்து மீறி நடந்து கொண்ட ஆபாச வீடியோ காட்சிகள், இணையதளத்தில் வெளியாயின. இந்த காட்சிப் பதிவுகள், ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவில் பதிவானவை என, தெரிய வந்தது. இந்த வீடியோ காட்சிகள், காட்டுத் தீ போல் பரவியதால், அவற்றை அரசு தடை செய்தது. இதையடுத்து, 'சிசிடிவி'யில் பதிவான இந்த காட்சிகள், எவ்வாறு வெளியாகின என, டில்லி போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காட்சிப் பதிவுகள் அனைத்தும், ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்களில் பதிவானவை என்றும், அதை மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்களே, இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாகவும், டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ரயில்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார், இதை செய்திருக்கலாம் என்ற கோணத்தில், விசாரணை நடத்தப்பட்டது. எனினும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, 'சிசிடிவி' கேமராக்களின் காட்சிப் பதிவுகள் பதிவு செய்யப்படும் பாதுகாப்பு அறையில் அனுமதி இல்லை என்றும், இதில் சி.ஐ.எஸ்.எப்., போலீசாருக்கு தொடர்பு இல்லை என்றும், அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, 'சிசிடிவி'யில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகளில், மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்களின் பேச்சுக் குரல் பதிவாகியிருப்பதாகவும், இதனால், சம்பந்தப்பட்டவர்களிடன் விசாரணை நடத்தி குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றும், டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்களே, இவ்வகை செயல்களில் ஈடுபட்டுள்ளது, பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
No comments:
Post a Comment