Tuesday, 12 November 2013

காதலை மறுத்த மாணவிக்கு விஷம் கொடுத்தவர் கைது



நீலகிரி மாவட்டத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றிக் கொலை செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி முல்லை நகரை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் பாபு (வயது 21). தச்சு தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்தார்.

மாணவி அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவி பள்ளிக்கு செல்லும்போதும் பின்னர் திரும்பும்போது ஆங்காங்கே நின்றுகொண்டு பாபு காதல் பார்வையை வீசினார். ஆனால் மாணவி அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.

ஒரு நாள் பாபு தன்னையே சுற்றிச்சுற்றி வருவதை அறிந்த மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பாபுவை மாணவியின் தந்தை எச்சரித்தார். ‘‘இனிமேல் இது போல் நடந்து கொள்ளக்கூடாது’’ என்று கூறினார். எனினும் பாபு தனது போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை.

மீண்டும் தனது காதல் தொல்லையை தீவிரமாக்கினார். ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை இது குறித்து கோத்தகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் பாபுவை பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.இந்நிலையில் நேற்று மாணவி பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பினார். அரசு கால்நடை மருத்துவமனை அருகே வந்தபோது பாபு அங்கு நின்றார். ஆள் அறவமற்ற பகுதியில் வந்த போது மாணவியை பாபு வழிமறித்தார்.

‘‘ஏன் என்னை காதலிக்க மறுக்கிறாய்?’’ என்று கேட்டார். கோபமடைந்த மாணவி, ‘‘நான் படிக்கின்ற பெண், எனவே என்னிடம் நீ காதல் பற்றி பேசாதே’’ என்று கூறி புறப்பட்டார். இதில் ஆத்திரமடைந்த பாபு பாட்டிலில் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து மாணவியின் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றினார். சற்றும் எதிர்பாராத மாணவி அலறித் துடித்தார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அங்கிருந்து பாபு தப்பியோடினார். மயக்கம் ஆரம்பித்த நிலையில் இருந்த மாணவியை அங்குள்ளவர்கள் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து மாணவியின் தந்தை கோத்தகிரி போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த சப்- இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தார்.

No comments:

Post a Comment