பாட்னா:பாட்னா, தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக, பீகாரில், இந்து மதத்தைச் சேர்ந்த, நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்புடன் தொடர்பு உள்ளதாக, பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டம், கடந்த மாதம், 27ல், நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன், மைதானத்தை சுற்றி, ஆறு இடங்களிலும், பாட்னா ரயில்வே ஸ்டேஷனிலும், தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில், ஆறு பேர், பலியாயினர்.இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, பீகார் மாநில போலீசாரும், தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ.,வைச் சேர்ந்த அதிகாரிகளும், இணைந்து விசாரித்து வருகின்றனர். இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த சிலர், கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம், விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், இந்த விசாரணையில், திடுக்கிடும், பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக, போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பீகார் மாநிலத்தை சேர்ந்த, மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:பாட்னா அருகேயுள்ள, லக்சிசாராய் என்ற இடத்தில், ஆறு பேரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். இவர்களில், நான்கு பேர், இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.இவர்களிடமிருந்து, 100க்கும் மேற்பட்ட, வங்கி சேமிப்பு புத்தகங்கள், ஏ.டி.எம்., கார்டுகள் கைப்பற்றப்பட்டன. முதல் கட்ட விசாரணையில், பாட்னாவில், குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்துவதற்கு, இவர்கள் மூலமாகவே, நிதி உதவி செய்யப்பட்டு உள்ளது, தெரியவந்தது.இவர்களுக்கு, பாகிஸ்தானில் செயல்படும், இந்தியன் முஜாகிதீன் அமைப்புடன், தொடர்பிருப்பதும், போன் மூலமாக, இவர்கள், அடிக்கடி, பயங்கரவாதிகளிடம் பேசியுள்ளதும், தெரியவந்து உள்ளது.இவர்கள், அனைவரும், 20 - 25 வயதுக்குட்பட்டவர்கள். தற்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பணத்துக்காக, இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு, இவர்கள், உதவிஇருக்கலாம் என, தெரியவந்து உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.பீகாரைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், அனீஸ் அங்கூர் கூறியதாவது:கைது செய்யப்பட்டுள்ள, இந்த இளைஞர்களிடம், விசாரணை அமைப்புகள், மென்மையாக நடந்து கொள்வதாக, தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்ட இவர்களை, 'ஹவாலா நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள்' என்று தான், விசாரணை அமைப்புகள் கருதுகின்றன. இந்த விஷயத்தில், விசாரணை அமைப்புகள், பாரபட்சமாக நடக்கின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.பாட்னாவை மையமாக வைத்து இயங்கும் இணையதளம் ஒன்றின் ஆசிரியர், இர்சதுல் ஹக் கூறியதாவது:கைது செய்யப்பட்டுள்ள, இந்து இளைஞர்கள், நான்கு பேரும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தான். இதில், எந்த சந்தேகமும் இல்லை. பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யிடமிருந்து, பணம் பெற்று, அவற்றை, இந்தியாவில், பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்துவதற்கு, இவர்கள், வினியோகித்துள்ளனர்.
பாட்னாவில், குண்டு வெடித்ததுமே, பங்கஜ் என்பவர் கைது செய்யப்பட்டதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர், தன்னை, பா.ஜ.,வைச் சேர்ந்தவர் என்று, கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த பங்கஜ், தற்போது எங்கே இருக்கிறார் என, தெரியவில்லை.இவ்வாறு, இர்சதுல் ஹக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment